பொதுவுடைமை சிந்தனையாளர் ஜீவானந்தம் பேரனுக்கு அரசு வேலை முதல்-அமைச்சர் வழங்கினார்


பொதுவுடைமை சிந்தனையாளர் ஜீவானந்தம் பேரனுக்கு அரசு வேலை முதல்-அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 15 March 2022 4:43 AM IST (Updated: 15 March 2022 4:43 AM IST)
t-max-icont-min-icon

பொதுவுடைமை சிந்தனையாளர் ஜீவானந்தம் பேரனுக்கு அரசு வேலைக்கான ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் விடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடைமை சிந்தனையாளருமான ஜீவா என்றழைக்கப்படும் ஜீவானந்தத்தின் பேரனான ம.ஜீவானந்துக்கு (மாற்றுத்திறனாளி) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர் பணியிடத்தில் சிறப்பு நேர்வாக பணிநியமன ஆணையினை வழங்கினார்.

வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 95 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

அதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் தொழில் நுட்பக் கட்டமைப்பை வலிமைப்படுத்தவும், எளிமையாக தொழில் நுட்ப கற்றல் வளங்களை பள்ளிகளில் உருவாக்கிடவும், தொழில் நுட்ப மற்றும் கணினி மயமான பள்ளிகளின் செயல்முறைக்கு ஏற்றவகையில் ஆசிரியர்களின் தொழில் நுட்ப திறனை மேம்படுத்திடவும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் காக்னிசன்ட் நிறுவனமும் இணைந்து பள்ளிகளில் தொழில் நுட்ப தரமேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், கணினிமயக் கற்றல் மேம்பாட்டுத் திட்டத்திற்கு காக்னிசன்ட் நிறுவனம் அறிவுசார் பங்குதாரராக தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து செயலாற்றும்.

நூல் வெளியீடு

கருணாநிதி எழுதி, பேராசிரியர் ஜெயபிரகாசால் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட “திருக்குறள் உரை” மற்றும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதி, கவுரி கிருபானந்தன் தெலுங்கில் மொழிபெயர்த்த “ஒரு புளியமரத்தின் கதை” ஆகிய நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை

ஆவின் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்தின் நிதியில் இருந்து ரூ.65 கோடியே 89 லட்சம் செலவில் சுமார் 100 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் தேசிய பால்வள வாரியத்தின் மூலம் மதுரை பால் பண்ணை வளாகத்தில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்பத்தில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை நிறுவப்பட்டது. இந்த தொழிற்சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை நேரு விளையாட்டு அரங்கம் அருகே அமைந்துள்ள ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில் ரூ.7 கோடியே 94 லட்சத்து 48 ஆயிரம் செலவில் 150 மாணவிகளுக்கான தங்குமிடம் உள்பட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்ட சிறுமிகளுக்கான புதிய விளையாட்டு விடுதி.

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.13 கோடியே 33 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இறகுப்பந்து விளையாட்டுக்கான முதன்மை நிலை மையம், ரூ.12 கோடியே 60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள மேஜை பந்து விளையாட்டுக்கான முதன்மை நிலை மையம், ரூ.14 கோடியே 59 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள மாணவ-மாணவிகளுக்கான விடுதி, ரூ.13 கோடியே 12 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட விளையாட்டு உயிர் எந்திரவியலுக்கான முதன்மை நிலை மையம், ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பாரம்பரிய களரிப்பயட்டு மற்றும் சிலம்பத்துக்கான பயிற்சி மையம், ரூ.51 லட்சத்து 72 ஆயிரம் செலவில் முகாம் மையத்தில் அமைக்கப்பட்ட உணவுக்கூடம், சமையல் அறை, இருப்பு அறை, ரூ.73 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வாகனங்கள் நிறுத்துமிடம் என மொத்தம் ரூ.84 கோடியே 57 லட்சத்து 70 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட விளையாட்டு உள்கட்டமைப்பு வசதி கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

‘நபார்டு’ வங்கி நிதி உதவியுடன்...

10 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் ‘நபார்டு’ வங்கி நிதி உதவியுடன் ரூ.9 கோடியே 34 லட்சத்து 35 ஆயிரம் செலவில் ஆய்வகங்கள், கூடுதல் கழிவறைகள், சுற்றுச்சுவர் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் ஆகிய உட்கட்டமைப்பு பணிகள் நிறைவுற்ற பள்ளிக் கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும் அவர், 92 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் ‘நபார்டு’ வங்கி நிதி உதவியுடன் ரூ.50 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 6 ஆயிரத்து 881 பயனாளிகளுக்கு ரூ.48 கோடியே 3 லட்சம் அளவில் சிறுதொழில் மற்றும் வியாபாரம் முனைவதற்கான கடனுதவிகள் வழங்குவதன் அடையாளமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் இயங்கும் விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் ஆகியவற்றில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் மறைந்த 15 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story