முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை


முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
x
தினத்தந்தி 15 March 2022 7:36 AM IST (Updated: 15 March 2022 7:36 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை, 

கோவை பாலக்காடு சாலை, சுகுணாபுரத்தைச் சேர்ந்தவர் எஸ்.பி.வேலுமணி. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான இவர், வழிகாட்டுதல் குழு உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர், கோவை புறநகர மாவட்டச் செயலாளர் ஆகிய கட்சிப் பொறுப்புகளில் உள்ளார். கடந்த 2013-16-ம் ஆண்டு வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டம், நீதிமன்றங்கள் துறை அமைச்சராகவும், அதன் பின்னர் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 2016 முதல் 2021 வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.

இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். இதன்படி எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். முடிவில் 13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரொக்கம், நிலப்பதிவு தொடர்பான ஆவணங்கள், தனியார் நிறுவனங்களுடனான பரிவர்த்தனை ஆவணங்கள், இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு வைப்புத்தொகை, மாநகராட்சி தொடர்புடைய அலுவல்பூர்வ ஆவணங்கள், ஹார்ட் டிஸ்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி கோவை மைல்கல் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்சஒழிப்புதுறை சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மற்றும் சேலம் உள்பட மாநிலம் முழுவதும் 58 (கோவையில் மட்டும் 41 இடங்கள்) இடங்களில் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story