வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்துக்குவிப்பு: எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை
வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்துக்குவித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை,
அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
இதைத் தொடர்ந்து 2016 முதல் 2021-ம் ஆண்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். இதன்படி எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். முடிவில் 13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரொக்கம், நிலப்பதிவு தொடர்பான ஆவணங்கள், தனியார் நிறுவனங்களுடனான பரிவர்த்தனை ஆவணங்கள், இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு வைப்புத்தொகை, மாநகராட்சி தொடர்புடைய அலுவல்பூர்வ ஆவணங்கள், ஹார்ட் டிஸ்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன், அவரது மனைவி ஹேமலதா உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வேலுமணியுடன் கூட்டு சேர்ந்து ஊழல் செய்ததாக 6 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இதைப்போலவே கோவை சிங்காநல்லூர் எம்எல்ஏ ஜெயராமன் வீட்டிலும் சோதனை நடக்கிறது. மேலும் கோவை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இன்னும் பல நபர்களின் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. கோவையில் 41 இடங்கள் (எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட), சென்னையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்கள் என மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்துவருகின்றது.
இந்த முறை அவர்மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருடன் சேர்த்து மேலும் 13 பேர்மீதும் இதே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அமைச்சராக பதவிவகித்த காலத்தில் சுமார் ரூ.58.23 கோடி (அதாவது 3,928% வருமானத்தை விட அதிகமாக) சேர்த்திருப்பதாக இந்த வழக்கு எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது தொடரப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்திருந்த சொத்துகளின் அடிப்படையில், இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
முதல் தகவலறிக்கையின்படி, 27.04.2016 முதல் 15.03.2021 வரையுள்ள காலக்கட்டத்தில் மட்டும் வருமானத்தை விட அதிகமாக ரூ.58,23,97,052 சொத்து சேர்த்ததாக எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில், அவருக்கு தொடர்புடைய சுமார் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story