தமிழர்களை அதிகாரம் பொருந்திய இடங்களில் அமர வைத்தது திமுக ஆட்சி தான் - விருதுகள் வழங்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் உரை
தமிழர்களை அதிகாரம் பொருந்திய அனைத்து இடங்களிலும் அமர வைத்தது திமுக ஆட்சி தான் என்று விருதுகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு பணிகளுக்கு தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். மிகவும் எழுச்சியோடும், உணர்ச்சியோடும் இந்த விழாவை நடத்தி கொண்டு இருக்கிறோம்; 3,500 ஆண்டுகள் பழமையான இனம் தமிழ் இனம்.
புத்தக பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து பதிப்பாளர்களும் பயனடையும் வகையில் அந்த பூங்கா அமையும். அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புத்தக பூங்கா அமைக்க அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும்.
தமிழர்களை அதிகாரம் பொருந்திய அனைத்து இடங்களிலும் அமர வைத்தது திமுக ஆட்சி தான். திமுக ஆட்சியை தமிழ் ஆட்சியாக, தமிழர்களின் ஆட்சியாக நடத்திக்கொண்டு இருக்கிறோம்; நாங்கள் என்று சொல்வது உங்கள் அனைவரையும் சேர்த்துதான்” என்று அவர் கூறினார்.
இதனையடுத்து தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி, சமுதாய உயர்வுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். தமிழ் அமைப்புகளுக்கும், திங்களிதழ்கள் என மொத்தம் 21 விருதுகளை வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.
இதன்படி தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படும் 2022ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதினை மறைந்த திரு. மு. மீனாட்சிசுந்தரம் அவர்களுக்குரியதை அவரது மனைவி திருமதி வசந்தா அவர்களுக்கும்,
2021 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது திரு. நாஞ்சில் சம்பத் அவர்களுக்கும்,
பெருந்தலைவர் காமராசர் விருது முனைவர் குமரிஅனந்தன் அவர்களுக்கும்,
மகாகவி பாரதியார் விருது திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுக்கும்,
பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமன் அவர்களுக்கும்,
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்கும்,
கம்பர் விருது திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கும்,
சொல்லின் செல்வர் விருது திரு. சூர்யா சேவியர் அவர்களுக்கும்,
ஜி.யு.போப் விருது திரு. அ.சு. பன்னீர் செல்வன் அவர்களுக்கும்,
உமறுப்புலவர் விருது திரு நா. மம்மது அவர்களுக்கும்,
இளங்கோவடிகள் விருது திரு. நெல்லை கண்ணன் அவர்களுக்கும்,
சிங்காரவேலர் விருது கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களுக்கும்,
மறைமலையடிகளார் விருது திரு. சுகி. சிவம் அவர்களுக்கும்,
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் இரா.சஞ்சீவிராயர் அவர்களுக்கும்,
அயோத்திதாசப் பண்டிதர் விருது திரு. ஞான. அலாய்சியஸ் அவர்களுக்கும்,
2020 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது முனைவர் வ.தனலட்சுமி அவர்களுக்கும்,
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வாயிலாக 2021ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது திரு. க. திருநாவுக்கரசு அவர்களுக்கும்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் வழங்கப்படும் 2021ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது நீதியரசர் சந்துரு அவர்களுக்கும்,
செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வாயிலாக வழங்கப்படும் தேவநேயப்பாவாணர் விருது முனைவர் கு.அரசேந்திரன் அவர்களுக்கும்,
தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படும் இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கி பொன்னாடை அணிவித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.
மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையால் வழங்கப்படும் தந்தை பெரியார் விருதினை பெறுபவருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் வழங்கப்படும் டாக்டர் அம்பேத்கர் விருதினைப் பெறுபவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் ஐந்து லட்சம், தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி பொன்னாடை அணிவித்து முதல்-அமைச்சர் சிறப்பித்தார்.
தொடர்ந்து 2021 ஆம் ஆண்டிற்கான தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கு வழங்கி விருதுத் தொகையான இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை, கேடயம், பொன்னாடையும்,
2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் வழங்கி ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை, கேடயம், பொன்னாடை முதலியன வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.
இந்த விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story