அதிமுகவின் முன்னணி நிர்வாகிகளை அரசியல் ரீதியாக பழிவாங்க துடிக்கிறது திமுக அரசு: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். கண்டனம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 March 2022 12:15 PM IST (Updated: 15 March 2022 12:15 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் பணிகளை முறியடிக்க திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளனர்.

சென்னை, 

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி. வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்பொது சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கழக முன்னணி நிர்வாகிகளை அரசியல் ரீதியாக பழிவாங்க துடிக்கிறது திமுக அரசு என்றும், கழகத்தின் மக்கள் பணிகளை முறியடிக்க திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக அவர்கள் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னணி நிர்வாகிகளை அரசியல் ரீதியாக பழிவாங்கத் துடிக்கிறது திமுக அரசு! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்கள் பணிகளை முறியடிக்க திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம்! 

மக்களுக்குத் தொண்டாற்றுவதிலும், அரசியல் பணிகளிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அர்ப்பணிப்புக்கும், உழைப்புக்கும் முன் நிற்க இயலாத திமுக அரசு, தனது தோல்விகளை மறைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர்கள் மீது மீண்டும் மீண்டும் பழிவாங்கும் நடவடிக்கைகளை ஏவிவிட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. S.P. வேலுமணி, M.L.A., அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தோடு திரு. வேலுமணி அவர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை என்ற பெயரில் களங்கத்தை அள்ளி வீசும் கண்ணியக் குறைவான நடவடிக்கையில் இறங்கிய திமுக அரசு, மீண்டும் திரு. வேலுமணி அவர்களைக் குறிவைத்தும், சிங்காநல்லூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. K.R. ஜெயராம் உள்ளிட்டோரைக் குறிவைத்தும் பழிவாங்கும் நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டிருக்கிறது. இந்த முறையற்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். திமுக அரசின் உள்நோக்கத்தை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அன்புச் சகோதரர் திரு. வேலுமணி அவர்கள் துடிப்புடன் செயல்பட்டு கழகப் பணிகள் ஆற்றியதை பொறுத்துக்கொள்ள இயலாமல் தற்போது அவர்மீது குறிவைத்துத் தாக்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல்களில் திமுக-வினரின் ஆள்தூக்கி நடவடிக்கைகளையும், முறைகேடுகளையும், வீரத்துடன் எதிர்த்துப் போராடிய திரு. வேலுமணி அவர்களை முடக்கிப் போடவே அவர் மீதும், அவர் தொடர்புடைய இடங்களிலும் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைகள் நடத்தப்படுகின்றது என்பதை அரசியல் தெரிந்த அனைவரும் நன்கு அறிவார்கள்.

சகோதரர் திரு. வேலுமணி அவர்கள் ஆயிரம் சோதனைகள் வந்தபோதும், அதனை எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதிமிக்க தொண்டர்களில் ஒருவரான திரு. வேலுமணி அவர்கள், திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளால் சிறிதும் தொய்வடைந்துவிடமாட்டார்; அவருடைய கழகப் பணிகளும், மக்கள் தொண்டும் தொய்வில்லாமல் தொடரும் என்பதை கழகத் தொண்டர்களும், கோவை மாவட்ட மக்களும் நன்கு அறிவார்கள்.

திமுக அரசின் தீய முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சோதனைகள் அனைத்தையும் வென்று, தமிழ் நாட்டு மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது; இனியும் விளங்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story