மது விற்பனையில் நிதி அமைச்சரின் கணக்குக்கு அரசின் நடவடிக்கை என்ன? - அன்புமணி ராமதாஸ் கேள்வி


மது விற்பனையில் நிதி அமைச்சரின் கணக்குக்கு அரசின் நடவடிக்கை என்ன? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
x
தினத்தந்தி 15 March 2022 4:27 PM IST (Updated: 15 March 2022 4:27 PM IST)
t-max-icont-min-icon

சமூகத்திற்கு பெருங்கேடை ஏற்படுத்தும் மதுக்கடைகளை உடனடியாக மூட அரசு முன்வர வேண்டும் என்று அண்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

"தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுவில் சுமார் 50% மது ஆயத்தீர்வை வரி செலுத்தப்படாமல் விற்பனை செய்யப்படுவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். மதுக்கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் அவர் வினா எழுப்பியிருக்கிறார். தமிழகத்தின் நிதி அமைச்சர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் கடுமையானவை; இவற்றை உதாசீனப்படுத்த முடியாது.

தமிழகத்தில் வரி வசூல் அமைப்பில் உள்ள ஓட்டைகளை அடைப்பது குறித்து நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசு எந்திரம் மீதே பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். "தமிழகத்தில் ஆயத்தீர்வை வளையத்திற்கு வெளியே விற்பனை செய்யப்படும் மதுவின் அளவு மிகவும் அதிகம். அதிகபட்சமாக 50% அளவுக்கு இது இருக்கலாம். சிறந்த தொழில் நுட்பங்கள் மற்றும் கண்காணிப்பை பயன்படுத்தி இதைத் தடுப்பதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும். மதுபாட்டில்கள் மீது ஹோலோகிராம் முத்திரை ஒட்டும் இப்போதைய முறை பயனற்றது. டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்கும் கருவிகள் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப் படவில்லை. மது விற்பனை அமைப்பு அடிப்படையாக மேம்படுத்தப்படவேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் புதியவை அல்ல. அவை ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியால் முன்வைக்கப்பட்டவை தான். ஆனால், இப்போது அந்தக் குற்றச்சாட்டுகளை தமிழக நிதியமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றுக்கு அரசு பதில் அளித்தாக வேண்டும்.

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுவில் பாதிக்கு பாதி வரி செலுத்தப்படாமல் விற்கப்படுகின்றன என்றால், அந்த குற்றத்தை செய்வது தனியார் அல்ல... அரசு நிறுவனமான டாஸ்மாக் தான். தமிழகத்தில் 11 மது ஆலைகள், 7 பீர் ஆலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மது மற்றும் பீர் வகைகள் முழுவதும் டாஸ்மாக் நிறுவனத்தால் தான் கொள்முதல் செய்யப்படுகின்றன. அவற்றில் 50% மது மற்றும் பீருக்கு ஆயத்தீர்வை வரி செலுத்தப்படுவதில்லை என்றால், அவை எப்படி டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றன?

ஆயத்தீர்வை செலுத்தாத மது பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அதன் விற்பனைத் தொகை எங்கு, யாருக்கு செல்கிறது? ஒருவேளை ஆயத்தீர்வை செலுத்தப்படாத மதுப்புட்டிகள் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுவதில்லை என்றால், அவை எங்கு விற்கப்படுகின்றன? கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றனவா? ஆயத்தீர்வை செலுத்தப்படாத மதுப்புட்டிகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக வைத்துக் கொண்டால் அதை கடந்த 20 ஆண்டுகளாக தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா? தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் உற்பத்தி செய்யப்படும் மதுவின் அளவும், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவின் அளவும் சமமாக இருக்கிறதா என்பதை தமிழக அரசின் ஆயத்தீர்வை துறை ஆய்வு செய்கிறதா... இல்லையா?

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மது ஆலையும் தனித்து இயங்குவதில்லை. அங்கு உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு மதுப்புட்டிக்கும் கலால் வரி செலுத்தப்படுவதையும், மதுப்புட்டிகள் டாஸ்மாக் கிடங்கைத் தவிர வேறு எங்கும் செல்லாமல் இருப்பதையும் உறுதி செய்ய ஒவ்வொரு ஆலையிலும் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான அதிகாரிகள் பணியமர்த்தப்படுகின்றனர். அவர்களின் கண்காணிப்பை மீறி வரி ஏய்ப்பும், கள்ளச் சந்தைக்கு செல்வதும் நடக்கிறதா?

50% மது ஆயத்தீர்வை செலுத்தப்படாமல் விற்பனை செய்யப்படுவதாக ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்துள்ள அமைச்சர், அது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஏதேனும் விளக்கம் கோரியுள்ளாரா? விசாரணைக்கு ஆணையிட்டிருக்கிறாரா? தமிழகத்தில் 2021-22ம் ஆண்டின் உத்தேச ஆயத்தீர்வை வருவாய் ரூ.10,000 கோடி. மதிப்பு கூட்டு வரி வருவாய் ரூ.30,000 கோடி. தமிழகத்தில் கணக்கில் காட்டப்பட்டப்பட்ட 50% மதுவுக்கு ரூ.40,000 கோடி ஆயத்தீர்வையும், மதிப்புக்கூட்டு வரியும் வசூலிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், கணக்கில் காட்டப்படாத 50% மதுவுக்கு வசூலிக்கப்பட வேண்டிய ரூ.40,000 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. இது ஊடக நேர்காணலில் கூறி விட்டு கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல. இதன்மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள செய்திக் கட்டுரையில் மதுப்புட்டிகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலமாக மட்டும் ஒரு நாளைக்கு ரூ.7.5 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ. 2,677 கோடி சுரண்டப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. இதை ஒப்புக்கொண்டுள்ள தொழிற்சங்கத் தலைவர் பாலுசாமி என்பவர், இதில் மேலிடம் வரை பங்கு போவதாக தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக அரசின் பதில் என்ன?

தமிழக அமைச்சர் கூறியுள்ள குற்றச்சாட்டின்படி அரசுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது தமிழகத்தின் சொந்த வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு எனும் நிலையில், இதை அலட்சியப்படுத்தி விட முடியாது. இது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.

மது வணிகத்தில் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு சார்ந்த அம்சங்கள் ஒருபுறமிருக்க, மக்கள்நலன் சார்ந்த கோணத்தில் அமைச்சரின் இந்தத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் மது குடிப்பதால் மட்டும் ஆண்டுக்கு 1 லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் அதிகாரப்பூர்வ மது வணிகத்தை கணக்கில் கொண்டு தான் இறப்பு எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. பாதிக்குப் பாதி மது விற்பனை கணக்கில் காட்டப்படுவதில்லை என்றால், மது அருந்தி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2 லட்சமாக இருக்கக்கூடும். சமூகத்திற்கு இவ்வளவு பெருங்கேட்டை ஏற்படுத்தும் மதுக்கடைகளை உடனடியாக மூட அரசு முன்வர வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Next Story