யு.பி.எஸ். பேட்டரி வெடித்து வீட்டுக்குள் புகை மூட்டம்: மூச்சுத்திணறி தாய், 2 மகள்கள் பலி


யு.பி.எஸ். பேட்டரி வெடித்து வீட்டுக்குள் புகை மூட்டம்: மூச்சுத்திணறி தாய், 2 மகள்கள் பலி
x
தினத்தந்தி 16 March 2022 2:12 AM IST (Updated: 16 March 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

யு.பி.எஸ். பேட்டரி வெடித்ததால், வீட்டுக்குள் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி தாய், 2 மகள்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை,

கோவை உருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 58). இவருக்கு அர்ச்சனா (24), அஞ்சலி (22) என 2 மகள்கள் இருந்தனர். விஜயலட்சுமியின் கணவர் ஜோதிலிங்கம் கடந்த 2 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.

எனவே 2 மகள்களுடன் விஜயலட்சுமி தனது வீட்டில் வசித்து வந்தார். மூத்த மகள் அர்ச்சனா தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இளைய மகள் அஞ்சலி தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

வீட்டுக்குள் புகை மூட்டம்

இந்நிலையில், நேற்று காலை 10 மணி அளவில் விஜயலட்சுமியின் உறவினர் ஒருவர், அவருடைய வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜன்னலை உடைத்து பார்த்தார்.

அப்போது வீடு முழுவதும் தீ விபத்து ஏற்பட்டு, புகை மூட்டமாக இருந்தது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

தாய்-2 மகள்கள் பலி

இதில் வீட்டின் உள்ளே சமையல் அறையில் விஜயலட்சுமியும், அஞ்சலியும் பிணமாக கிடந்தனர். படுக்கை அறையில் அர்ச்சனா, தரையில் பிணமாக கிடந்தார். போலீஸ் விசாரணையில், வீட்டில் இருந்த யு.பி.எஸ். பேட்டரி மின் கசிவால் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டு, அதனால் உண்டான புகை மூட்டத்தில் சிக்கி தாயும், 2 மகள்களும் உயிரிழந்தது தெரியவந்தது.

நாயும் பலியான சோகம்

விஜயலட்சுமி தனது வீட்டின் பாதுகாப்புக்காக ஒரு நாயை செல்லமாக வளர்த்து வந்தார். சங்கிலியால் கட்டப்பட்டு வீட்டில் இருந்த அந்த நாயும், விபத்தின் போது புகை மூட்டத்தில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்துக்கு வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story