கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: சி.எம்.டி.ஏ. உறுப்பினர்-செயலாளருக்கு பிடிவாரண்டு


கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: சி.எம்.டி.ஏ. உறுப்பினர்-செயலாளருக்கு பிடிவாரண்டு
x
தினத்தந்தி 16 March 2022 2:14 AM IST (Updated: 16 March 2022 2:14 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: சி.எம்.டி.ஏ. உறுப்பினர்-செயலாளருக்கு பிடிவாரண்டு ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு விரிவாக்கம் செய்வதற்காக விமான நிலையத்தின் அருகில் உள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தாரப்பாக்கம் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதி நிலங்கள் நிறுவன ரீதியான மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நிலத்தை கையகப்படுத்தும் முடிவை கைவிடுவதாக அரசு அறிவித்தது. இதையடுத்து, தாரப்பாக்கம் பகுதியை மீண்டும் குடியிருப்பு பகுதியாக அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் கிரீஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நிலத்தை வகைமாற்றம் செய்வது தொடர்பாக தொழில்நுட்பக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 4 மாதங்களுக்குள் தகுந்த முடிவை அறிவிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு (சி.எம்.டி.ஏ.) கடந்த 2020-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தாததால், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ராவை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது அன்சுல் மிஸ்ரா ஆஜராகவில்லை. அதையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியில் வரக்கூடிய பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story