முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு உள்பட 59 இடங்களில் லஞ்சஒழிப்பு சோதனை


முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு உள்பட 59 இடங்களில் லஞ்சஒழிப்பு சோதனை
x
தினத்தந்தி 15 March 2022 11:59 PM GMT (Updated: 15 March 2022 11:59 PM GMT)

வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடிக்கு சொத்து குவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்புடைய 59 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை,

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின் பேரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.58¼ கோடிக்கு சொத்து குவித்ததாக எஸ்.பி.வேலுமணி உள்பட 10 பேர் மீதும், 3 நிறுவனங்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்றுமுன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று கோவையில் 42 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 59 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ஆனைகட்டியை அடுத்துள்ள கேரள எல்லையில் உள்ள ஒரு இடமும் அடங்கும்.

சென்னையில் சோதனை நடந்த இடங்கள்

சென்னையில் மட்டும் வேலுமணி தொடர்புடைய 7 இடங்களில் சோதனை நடந்தது.

அதன்படி மயிலாப்பூர், சாய்பாபா காலனி, நரசிம்மபுரத்தில் உள்ள கான்ஸ்ட்ராமால் குட்ஸ் நிறுவனம், தேனாம்பேட்டை, அண்ணாசாலையில் உள்ள ஆலம் தங்க-வைர நகைக்கடை, தியாகராயநகர், திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள சிப்ரியன் ஓட்டல், நந்தனம், சி.ஐ.டி.நகர் மாடல் ஹட்ஸ்மான் ரோட்டில் உள்ள மகாகணபதி ஜூவல்லர்ஸ் நகைக்கடை, கோடம்பாக்கம், தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள வனம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விஷ்ணுவர்தன் என்பவரின் வீடு, ஆதம்பாக்கம், இ.பி.காலனி, 3-வது தெருவில் வசிக்கும் மேற்பார்வை பொறியாளர் சரவணகுமார் என்பவரின் வீடு, வேலுமணியின் பாதுகாப்பு போலீஸ் ஏட்டு ஸ்டாலின் வசிக்கும் மயிலாப்பூர், பாபநாசம் சிவன் சாலையில் உள்ள சி.ஐ.டி.போலீஸ் குடியிருப்பு வீடு ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

கோவை வேலுமணி வீடு

மேலும் கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு 5 பேர் கொண்ட குழு நேற்று காலை 6.45 மணி அளவில் வந்தனர்.

பின்னர் அவர்கள் வீட்டு கேட்டை அடைத்து விட்டு சோதனை நடத்தினர். வெளி நபர்கள் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சோதனையின்போது எஸ்.பி.வேலுமணி வீட்டில் இருந்தார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த சோதனை குறித்து தகவல் பரவியதும் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணி வீடு முன் குவிய தொடங்கினர்.

முன்னாள் அமைச்சர்கள் வருகை

சோதனை குறித்த தகவல் பரவியதும் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அங்கு விரைந்து வந்தனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் வந்தனர். தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு முன் அமர்ந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதேபோன்று தொண்டாமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் பண்ணை வீடு, கோவைப்புதூரில் உள்ள அவரது அண்ணன் அன்பரசன் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் அறக்கட்டளை அலுவலகம், இதேபோல் சிங்காநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., எஸ்.பி.வேலுமணி உதவியாளர் சந்தோஷ் உள்பட கோவையில் மட்டும் 42 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

காலை 7 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.

சேலம்

இதுதவிர சேலம், ஆத்தூர் உடையார்பாளையத்தில் உள்ள 2 நகைக்கடைகள், ஆத்தூரில் உள்ள சென்னை பூந்தமல்லி ஊரக வளர்ச்சிப்பணிகள் திட்ட செயற்பொறியாளர் வரதராஜபெருமாள் என்பவரது வீடு, அதே பகுதியில் உள்ள அவரது உதவியாளர் கணேசன் வீடு, மேச்சேரியில் வசிக்கும் சென்னை ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பு பொறியாளர் சரவணகுமார் என்பவரது வீடு, நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியில் உள்ள ஆசிரியர் சரவணக்குமார் என்பவரது வீடு என 6 இடங்களில் சோதனை நடந்தது.

திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நகைக்கடையிலும் இந்த சோதனை நடந்தது. கிருஷ்ணகிரி ஓசூரில் உள்ள ராஜேஸ்வரி என்பவரது வீட்டுக்கு சோதனை நடத்த போலீசார் சென்றனர். ஆனால் அவர் சென்னையில் வசிப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

திருப்பூரில் குமரன் சாலையில் உள்ள மகா கணபதி நகைகடையிலும், கோவை ஆனைகட்டி அருகே கேரள மாநில எல்லைக்குள் உள்ள ஒரு பங்களாவிலும் சோதனை நடைபெற்றது.

Next Story