பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி,
தமிழ் மாதங்களில் 12-வதாக வரக்கூடிய பங்குனி மாதமும், நட்சத்திரங்களில் 12-வதாக வரக்கூடிய உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய அற்புத நாளில் 12 திருக்கைகளைக் கொண்ட முருகப் பெருமானுக்கு சிறப்பு மிகுந்த விரத நாளாக, பங்குனி உத்திர விழாவாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற மார்ச் 18-ந்தேதி வெள்ளிக்கிழமை (பங்குனி 4-ம் தேதி) பங்குனி உத்திர விழா கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர விழாவின் போது முருகன் கோயில்களில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இதற்காக விரதமிருந்த பக்தர்கள் பால், பன்னீர், பூ காவடிகளை ஏந்தியும், கண்ண அலகு, மயில் அலகு, தேர் அலகு என பல்வேறு விதமாக அலகு குத்தியும், முருகனின் கோயில்களுக்கு பாதயாத்திரை சென்றும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வழிபடுவர்.
இந்த நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story