அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றில் கிடைத்த 2-வது வெற்றி - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 16 March 2022 9:39 PM IST (Updated: 16 March 2022 9:42 PM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்றில் கிடைத்த 2-வது வெற்றி என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றி! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்களுக்கான மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு இந்த ஆண்டே செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள அனுமதி கழக அரசு பொறுப்பேற்ற பிறகு சமூகநீதி வரலாற்றில் கிடைத்துள்ள இரண்டாவது மிகப்பெரிய வெற்றி!

மருத்துவ மாணவர்கள்  இழந்த உரிமை, 5 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று திமுக நடத்திய சட்டப் போராட்டத்தினால் கிடைக்கப்பெற்றுள்ளது.

'நீட்' கோடரி மூலம் எம்.பி.பி.எஸ். மருத்துவக் கனவை ஒன்றிய பாஜக அரசு எப்படிச் சிதைத்துக் கொண்டிருக்கிறதோ - அதேபோல் அரசு மருத்துவர்களின் 50 சதவீத இடஒதுக்கீட்டையும் காவு கொடுத்தது. 

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு மருத்துவ மாணவர்களின் சார்பில், பல்வேறு காரணிகளை முன்வைத்ததை ஏற்றுக்கொண்டு அனுமதியை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

சமூகநீதியை மதிக்காத ஒன்றிய பாஜக அரசுக்குப் பதிலாகச் சமூகநீதியைப் பாதுகாக்க உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு மகத்தானது.

இதே போல் நீட் தேர்வு போராட்டத்திலும் சமூகநீதி நிச்சயம் வெல்லும். அதற்காகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும்' என்று கூறியுள்ளார்.

Next Story