திருப்பூர்: நூல் மில்லில் தீ விபத்து - சுமார் 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையானது.
திருப்பூர் அருகே நூல்மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து தீக்கிரையானது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம், மங்கலத்தை அடுத்த பூமலூர் பகுதியில் கணேஷ்குமார் (38) என்பவருக்குச் சொந்தமான பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கும் நூல் மில் உள்ளது. இன்று இந்த நூல் மில்லில் 6 வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் நூல்மில்லில் உள்ள இயந்திரத்தில் இயந்திர உராய்வின் காரணமாக தீப்பற்றியது.
மில்லில் தீப்பற்றியதைப் பார்த்த வடமாநில தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பல்லடம் தீயணைப்பு நிலைய அதிகாரி சுரேஷ்குமார் தலைமையிலான 5 வீரர்கள் நூல் மில்லில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் 20 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், பஞ்சுகள் தீக்கிரையானதாக நூல் மில் உரிமையாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story