ஆட்டோக்கள் இயக்குவது குறித்து இருமாநில அதிகாரிகள் ஆலோசனை


ஆட்டோக்கள் இயக்குவது குறித்து இருமாநில அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 16 March 2022 11:21 PM IST (Updated: 16 March 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி - கடலூர் எல்லை பகுதியில் ஆட்டோக்கள் இயக்குவது குறித்து இருமாநில அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

புதுச்சேரி - கடலூர் எல்லை பகுதியில் ஆட்டோக்கள் இயக்குவது குறித்து இருமாநில அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
ஆட்டோக்கள் பறிமுதல்
கடலூரில் இருந்து புதுச்சேரி பகுதியான கன்னியக்கோவில், கிருமாம்பாக்கம் வழியாக தமிழக பகுதியான ரெட்டிச்சாவடி வரை தினமும் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்கள் புதுச்சேரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் பர்மிட் இல்லாமல் இயக்கப்படுவதாகவும், இதனால் உள்ளூர் ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது. 
அதன்பேரில் கடலூரில் இருந்து பர்மிட் இல்லாமல் புதுச்சேரிக்குள் நுழையும் ஆட்டோக்களை போக்குவரத்து துறை அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். 
ஆலோசனை கூட்டம்
இந்த விவகாரம் தொடர்பாக ஷேர் ஆட்டோ தொழிலாளர்கள், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து தங்களது ஆட்டோக்களை புதுச்சேரிக்குள் நுழைந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் புதுச்சேரி போக்குவரத்து துறை அதிகாரி பிரபாகரராவ், கடலூர் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அதிகாரி சுதாகர், புதுச்சேரி தெற்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரி சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ரெட்டிச்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில், ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இன்னும் சில நாட்களில் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story