அண்ணாநகர் பாலத்தில் இறுதிகட்டத்தில் கட்டுமானப் பணிகள்


அண்ணாநகர் பாலத்தில் இறுதிகட்டத்தில் கட்டுமானப் பணிகள்
x
தினத்தந்தி 17 March 2022 10:26 PM IST (Updated: 17 March 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அண்ணாநகர் பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் 2 வழிகளிலும் போக்குவரத்து தொடங்கியது.

புதுச்சேரி அண்ணாநகர் பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் 2 வழிகளிலும் போக்குவரத்து தொடங்கியது.
தண்ணீர் தேங்கும் அவலம்
மழைக்காலங்களில் புதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கத்தில் தண்ணீர் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது. மழையின் போது அந்த பகுதியில் தேங்கும் தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்படுவதால் அரசு பணம் விரயமாவதால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தநிலையில் இந்திராகாந்தி சதுக்கம் அண்ணாநகர் பகுதியில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் வாய்க்காலை அகற்றிவிட்டு பெரிய அளவிலான வாய்க்கால் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. 
இதற்காக ராட்சத எந்திரங்கள் மூலம் பாலம் அமைக்கும் பணி கடந்த 9-ந்தேதி தொடங்கியது. 
மாற்றுப்பாதையில் போக்குவரத்து
இதையொட்டி பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அதாவது, பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் மரப்பாலம் சந்திப்பு வழியாக திருப்பி விடப்பட்டன. ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதற்கிடையே பஸ் நிலையத்தில் இருந்து இந்திராகாந்தி சிலை நோக்கி செல்லும் வழியில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்ததால் கடந்த 15-ந்தேதி முதல் ஒரு வழியில் மட்டும் போக்குவரத்து தொடங்கியது.
தொடர்ந்து அந்த பகுதியில் இரவு, பகலாக கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. இதன் காரணமாக இந்திராகாந்தி சிலையில் இருந்து பஸ்நிலையம் நோக்கி செல்லும் வழியில் 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. 
இருவழியிலும் வாகனங்கள்
இதைத்தொடர்ந்து இன்று முதல் 2 வழிகளிலும் போக்குவரத்து தொடங்கியது. பாலத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக முடியாத நிலையிலும் வேலை நடக்கும் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் செல்ல இந்த வழியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள், அலுவலகம், ஆஸ்பத்திரி செல்வோரும் சுற்றி செல்லாமல் தடையின்றி சென்று வருகின்றனர்.
இதன் காரணமாக மரப்பாலம், முதலியார்பேட்டை, சிமெண்டு ரோடு பகுதிகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்துள்ளது.

Next Story