காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு; மணமகனை தாக்கி பெண்ணை கடத்தி சென்ற உறவினர்கள்....!
ராசிபுரம் அருகே காதல் திருமணம் செய்த மணமகன் மற்றும் உறவினர்களை தாக்கிவிட்டு மணப்பெண்ணை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி ஓனான் கரடு பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி-கண்ணம்மாள் தம்பதியினரின் மகன் அஜித் குமார் (வயது 23). இவர் ஐ.டி.ஐ படித்துவிட்டு தற்போது நாமக்கல் அருகே உள்ள முதலைப்பட்டி பகுதியில் மின்சார வாரியத்தில் லேபர் காண்ட்ராக்ட் வேலை பார்த்து வருகிறார்.
இவரும், சிங்களாந்தபுரம் அருகே உள்ள களர்க்காடு பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன்-முத்துமணி தம்பதியினரின் மகள் சுஜிதா (19) கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
காதல் திருமணம்
பிளஸ் 2 படித்த சுஜிதா தற்போது நீட் பயிற்சி மையத்திற்கு சென்று வருகிறார். இவர்களது திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித்குமார் சுஜிதா இருவரும் சேந்தமங்கலம் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அங்கு போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அஜீத் குமாருடன் சுஜிதாவை அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து அஜித் குமார் தனது காதல் மனைவி சுஜிதா மற்றும் உறவினர்களுடன் வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றனர். அப்போது சுஜாதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு அஜீத் குமாரை மிரட்டியுள்ளனர். இதற்கு பயந்து போய் அஜித்குமார் காதல் மனைவியுடன் ராசிபுரம் மகளிர் போலீசில் பாதுகாப்பு கேட்டு சென்றுள்ளனர்.
உறவினர்கள் தாக்குதல்
அவர்களிடம் மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் அஜித்குமாரின் இருப்பிடம் பேளுக்குறிச்சி போலீஸ் எல்லைக்கு உட்பட்டதாக இருப்பதால் அங்கு அனுப்பி வைத்தனர். மகளிர் போலீசாரின் அறிவுறுத்தல் படி காதல் திருமண ஜோடிகள் மற்றும் அவரது உறவினர்கள் ஒரு காரில் பேளுக்குறிச்சிக்கு சென்றனர்.
அவர்கள் அப்பநாயக்கன்பட்டி அருகே சென்றபோது 50-க்கும் மேற்பட்டோர் காதல் ஜோடி சென்ற காரை தடுத்து நிறுத்தி கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு கார் கண்ணாடியை உடைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் காதல் திருமணம் செய்த அஜித்குமார் அவரது தாய்மாமன் ரவி (51), அஜீத்குமாரின் சித்தி விஜயா(31) உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். தற்போது ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அஜித்குமார், ரவி, விஜயா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பி உள்ளனர்
இதுபற்றி அஜித் குமார் கூறியதாவது:-
நான் காதலித்து திருமணம் செய்து கொண்ட சுஜிதாவை அவரது பெற்றோரும் உறவினர்களும் வழிமறித்து கடுமையாக தாக்கினர். நான் சுஜிதாவின் கழுத்தில் கட்டியிருந்த தாலியை அறுத்து எறிந்துவிட்டு சுஜிதாவை கடத்திச் சென்றுவிட்டனர். நான் காதலித்து திருமணம் செய்து கொண்ட சுஜிதாவை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
காதல் திருமணம் செய்து கொண்டவர்களை தாக்கிவிட்டு மணப்பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 பேருக்கு வலைவீச்சு
இது பற்றி அஜித்குமாரின் தாய்மாமன் ரவி ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் விசாரணை நடத்தி மணப்பெண்ணின் தந்தை மாதேஸ்வரன், இவரது மனைவி முத்துமணி, இவர்களது மகள் இந்திரா, மகன் கவியரசு, மற்றும் மாதேஸ்வரனின் மாமனார், மாமியார், மற்றும் செந்தில், மணிகண்டன், கணேசன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். தலைமறைவாக உள்ள அவர்களை ராசிபுரம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story