பழனி பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் கோலாகலம் - ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை


பழனி பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் கோலாகலம் - ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை
x
தினத்தந்தி 18 March 2022 5:53 PM IST (Updated: 18 March 2022 5:55 PM IST)
t-max-icont-min-icon

பழனி பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்,

தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் திகழ்கிறது. பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் விழாவையொட்டி தினமும் வெள்ளி காமதேனு, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று மாலை நடைபெற்றது. விநாயகர் வழிபாட்டுடன், மாலை 5 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கிய நிலையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம் நடைபெற்று திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்த திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டமானது இன்று நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்க, பழனி மலை அடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதையில் தேர் பவனி வருகிறது. இந்த தேரோட்ட திருவிழாவில் கலந்து கொள்ள, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர். 

மேலும் பக்தர்கள் பலர் காவடி எடுத்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். அவர்கள் கிரிவலப்பாதையில் சுற்றி வந்து, மலைக்கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்களை வழிநடத்துவதற்காகவும் பழனி மலைக்கோவில் மற்றும் கிரிவலப்பாதையை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 2,600-க்கும் அதிகமான போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால், பழனி பங்குனி உத்திர திருவிழாவில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பக்தர்களுக்கு முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனி பங்குனி உத்திர திருவிழாவிற்கு வருகை தந்துள்ளனர். 

Next Story