தி.மு.க. அரசின் ‘பட்ஜெட்’ எப்படி? அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள் கருத்து


தி.மு.க. அரசின் ‘பட்ஜெட்’ எப்படி? அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள் கருத்து
x
தினத்தந்தி 19 March 2022 12:38 AM IST (Updated: 19 March 2022 12:38 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. அரசின் ‘பட்ஜெட்’ எப்படி இருக்கிறது என்பது பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:- தந்தை பெரியார் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்பாகவும் வெளியிடப்படும். இப்பணிகள் ரூ.5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என்பது தித்திப்பான செய்தி ஆகும். இதனை வரவேற்கிறோம்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி:- தமிழக அரசின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு சமூக பார்வையோடு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதன் அடிப்படையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கான பாதையில் தொடர்ந்து செல்கிற சீரிய முயற்சியாக கருதி பாராட்டுகிறேன்.

டாக்டர் ராமதாஸ், வைகோ

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- நிதி நிலை அறிக்கையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறைக்காக அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் மிகவும் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும் கூட, தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதற்கான சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் இலக்குகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் வரவு-செலவு திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது.

பாலகிருஷ்ணன், முத்தரசன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:- பல நல்ல நோக்கங்களையும், முன்மொழிவுகளையும் கொண்டுள்ள நிதிநிலை அறிக்கையை வரவேற்கும் அதே வேளையில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட நிதி ஆதாரங்களை திரட்டும் முன் முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:- பல திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அதே சமயம் ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்த பெண்களும், பழைய ஓய்வூதிய திட்டம் ஏற்கப்படும் என்று எதிர்பார்த்த அரசு பணியாளர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன்

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:- தேர்தலுக்கு முன்பு தி.மு.க.வினர் அளித்த வாக்குறுதிகள் பற்றியோ, மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலோ அறிவிப்புகள் இல்லாத வெற்று அறிக்கையாக தமிழக அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:- தமிழக அரசின் பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப முக்கிய அம்சங்கள் இடம் பெறவில்லை. மாநில வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் இல்லாத சாதாரண பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது.

சரத்குமார், வேல்முருகன்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்:-தமிழக போலீஸ்துறையில் சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும் என்பவை உள்பட தமிழக அரசால் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகளும், திட்டங்களும் வரவேற்கத்தக்கது.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன்:- தமிழ் வளர்ச்சித்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கியதோடு தமிழ் மொழிக்கும், பிற சர்வதேச மொழிகளுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

விக்கிரமராஜா

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா:-

தொலைநோக்கு பார்வையுடனும், நீண்ட காலம் பயனளிக்கும் வகையிலும் தீர்க்கமான சிந்தனையோடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரவேற்பும்..., ஏமாற்றமும்...

தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி., இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் எம்.பி., சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மணி அரசன், அருந்ததி மக்கள் கட்சி தலைவர் வலசை ரவிச்சந்திரன், லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் நெல்லை ஜீவா, இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் சத்யகம் ஆர்யா, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தலைவர் கே.மாரியப்பன், தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பி.கே.இளமாறன், தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பின் தலைவர் சோழ நாச்சியார் ராஜசேகர் ஆகியோர் தமிழக பட்ஜெட்டை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் பி.ஜான்சிராணி ஆகியோர் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story