கைதி தப்பியோடிய விவகாரம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணியிடை நீக்கம்


கைதி தப்பியோடிய விவகாரம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 19 March 2022 1:33 AM IST (Updated: 19 March 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

கைதி தப்பியோடிய விவகாரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் நாகூர் பாலக்காடு வடகுடியை சேர்ந்தவர் தனசேகரன்(வயது 31). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. ஒரு வழிப்பறி சம்பவம் தொடர்பாக நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக வேளாங்கண்ணி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி தலைமையில் போலீஸ்காரர்கள் மணிகண்டன், ஜெகதலபிரதாபன், ஆயுதப்படை பிரிவு ஏட்டு விஜயகுமார் ஆகிய 4 பேர் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து கைதி தனசேகரனை அழைத்து வந்தனர்.

தஞ்சை அருகே வளம்பக்குடி என்ற இடத்தில் வந்தபோது இயற்கை உபாதையை கழிப்பதற்காக வாகனத்தை நிறுத்தினர். அப்போது கைதி தனசேகரன் தப்பியோடி விட்டார்.

4 பேர் பணியிடை நீக்கம்

இந்த சம்பவம் தொடர்பாக துறைரீதியிலான விசாரணைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். விசாரணைக்கு பின்னர் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி வேளாங்கண்ணி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி, போலீஸ்காரர்கள் மணிகண்டன், ஜெகதலபிரதாபன், ஆயுதப்படை பிரிவு ஏட்டு விஜயகுமார் ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நேற்று உத்தரவிட்டார். இதேபோல நாகை அருகே மோட்டார்சைக்கிளில் மதுபானம் கடத்தி வந்தபோது, மோட்டார்சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த 17 வயது சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவத்தில், கவனக்குறைவாக செயல்பட்டதாக நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன், ஆயுதப்படை போலீஸ்காரர் பார்த்திபன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story