குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 எப்போது வழங்கப்படும்? நிதி அமைச்சர் தகவல்


குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 எப்போது வழங்கப்படும்? நிதி அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 19 March 2022 4:37 AM IST (Updated: 19 March 2022 4:37 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என்பதற்கு நிதி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

சட்டசபை தேர்தலின்போது தி.மு.க சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து இந்த திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்தது.

இதற்கிடையே தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-

கடினமாக இருக்கிறது

மகளிரின் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் என்ற கொள்கையின் அடிப்படையில், அவர்களின் நலனுக்காக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளான ஆவின் பால் விலைக்குறைப்பு, சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி, அரசு பஸ்களில் இலவச பயணம் போன்ற பல வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளார்.

அடுத்த முக்கிய வாக்குறுதியான மகளிருக்கான உரிமைத்தொகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். சென்ற ஆட்சியினர் (அ.தி.மு.க.) விட்டுச்சென்ற நிதி நெருக்கடி சூழல் காரணமாக, இந்த வாக்குறுதியை இந்த அரசின் முதல் ஆண்டில் செயல்படுத்துவது கடினமாக இருந்து வருகிறது.

நிதிநிலையில் முன்னேற்றம்

இருப்பினும், இத்திட்டத்தின் கீழ் பயன்அடைய தகுதியுள்ள பயனாளிகளை பல்வேறு தரவுகளின் அடிப்படையில் கண்டறிந்து, பயன்கள் அவர்களை சரியாக சென்றடையும் வகையில் திட்டத்தை வடிவமைப்பதற்கான பணிகள் முழு முனைப்புடன் நடைபெற்று வருகின்றன என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.

இதன் அடிப்படையில், இந்த அரசு எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளின் காரணமாக நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது இத்திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story