தேனி: பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவன் - அச்சத்தில் ஆசிரியர்கள்..!


தேனி: பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவன் - அச்சத்தில் ஆசிரியர்கள்..!
x
தினத்தந்தி 19 March 2022 5:41 PM IST (Updated: 19 March 2022 5:41 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவன் கத்தியுடன் வருவதால் ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

தேனி,

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், சுமார் 1000 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படித்து வரும் பிளஸ் 1 மாணவனின் ஒழுங்கீனமான செயல்களால் ஆசிரியர்கள் அவரது பெற்றோரை அழைத்து வரச் சொல்லி கண்டித்தனர். 

இந்நிலையில் இம்மாதம் 16ஆம் தேதி அந்த மாணவன் கத்தியுடன் பள்ளிக்கு வந்து ஆசிரியரை மிரட்டி உள்ளார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆசிரியர்கள் புகார் அளிக்கவே பெரியகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையில் ஆசிரியர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. 

அதைத்தொடர்ந்து மார்ச் 17ஆம் தேதியும் அம்மாணவன் கத்தியுடன் வந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தேனி முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதேபோல் ஜி. கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கு வெளியே மாணவர்கள் மோதிக் கொண்டதால் தற்போது பள்ளி ஆரம்பிக்கும் மற்றும் முடியும் நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது

இந்நிலையில் நாளை கெங்குவார்பட்டி, ஜி. கல்லுப்பட்டி, சில்வார்பட்டி உட்பட தேவதானப்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து பள்ளிகளில் நடைபெறும் வன்முறைச் செயல்களை களையும் பொருட்டு மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கல்வித்துறை மற்றும் காவல்துறையிடம் முறையிட்டு வந்தனர்.

இதற்கிடையே தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவன் வீராவேசமாக பேசிய வீடியோ  வைரலாகி வருகிறது.

Next Story