கோவை உள்பட 3 மாவட்டங்களில் மொத்த காய்கறி வணிக வளாகம்; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
தேனி, திண்டுக்கல் மற்றும் மணப்பாறையில் ரூ.381 கோடியில் உணவுப்பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் கோவை உள்பட 3 மாவட்டங்களில் மொத்த காய்கறி வணிக வளாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:-
வேளாண் மதிப்பு கூட்டப்பட்ட தொழிற்பேட்டை
வேளாண் தொழிலுக்கான எந்திரங்கள், தளவாடங்கள் மீதான முதலீட்டிற்கு 1½ கோடி ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.
டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் வேளாண்மையே முதன்மை தொழிலாக உள்ளதால், திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கான தொழிற்பேட்டை தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் உருவாக்கப்படும்.
வேளாண்மை தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காணக்கூடிய வேளாண் புத்தொழில் நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்கு, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனமானது வேளாண்மை-உழவர் நலத்துறையுடன் இணைந்து ஒரு சிறப்பு போட்டியை ஏற்பாடு செய்யும்.
தேனி, திண்டுக்கல், மணப்பாறை
தேனி, திண்டிவனம், மணப்பாறை ஆகிய பகுதிகளில் 451 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் நிறுவனத்தினால் உணவுப்பூங்காக்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த உணவுப்பூங்காக்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் 381 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தினால் நபார்டு வங்கியின் கடன் உதவியுடன் உருவாக்கப்படும்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள், உற்பத்தியாளர் தொகுப்புகள், சமுதாய பண்ணை பள்ளிகள் ஆகியவற்றை அமைக்க 30 கோடியே 56 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவையில் அச்சு வெல்லம் தயாரிப்பு மையம்
அறிவியல் ரீதியாக தூய்மையான முறையில் அச்சுவெல்லத்தை தயாரிக்கும் முறையை கரும்பு விவசாயிகளிடையே பிரபலப்படுத்தும் விதமாக, 2022-2023-ம் ஆண்டில் ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் அச்சுவெல்லம் தயாரிக்க 100 இடங்களில் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் அச்சு வெல்ல தயாரிப்பு மையம் துவங்க 100 விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். இதற்காக, ஒரு கோடி ரூபாய் மாநில வேளாண் வளர்ச்சித் திட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டாரம் அய்யன்கொல்லியில் முதன்மைப் பதப்படுத்தும் நிலையம் உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் இயங்கி வருகிறது. இவ்வட்டார விவசாயிகள் காபி, மிளகினை மதிப்புக்கூட்டி கூடுதல் வருமானம் கிடைக்க வழிசெய்யும் வகையில், காபி கொட்டை உடைத்து தரம் பிரிக்கும் எந்திரம் மிளகு தரம் பிரித்து பொடி செய்யும் எந்திரங்கள் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் அமைக்கப்படும்.
கோவை, தேனியில் மொத்த காய்கறி வணிக வளாகம்
கேரள அரசின் தோட்டக்கலை கழகமும், வியாபாரிகளும் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக காய்கறிகள், பழங்களை கொள்முதல் செய்ய வழிவகை செய்யும் வகையில், 2022-2023-ம் ஆண்டில் தேனி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், காய்கறிகள் வணிக வளாகம் பொது, தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
2021-2022-ம் ஆண்டில் முதல் வேளாண் பட்ஜெட்டில், திருச்சி - நாகை பகுதியை வேளாண் தொழில் பெருந்தடமாக அறிவித்தது. காவிரி டெல்டா மாவட்ட தென்னை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், 2009-ம் ஆண்டில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தென்னை வணிக வளாகத்தில் தென்னை மதிப்புக்கூட்டும் மையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 2022-2023-ம் ஆண்டில், இவ்வளாகத்தை வலுப்படுத்த, 500 டன் சேமிப்பு கிடங்கு, சுற்றுச்சுவர் போன்ற கட்டுமானங்கள் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் அமைக்கப்படும்.
வேளாண் விற்பனை சார்ந்த சேவைகள், செய்திகள், உழவர் சந்தை விலை பற்றிய விவரங்களை வேளாண் விற்பனைத் துறையின் இணைய தளத்தில் வழங்க ஏதுவாக வேளாண்மை விற்பனை - வேளாண் வணிகத்துறை கணினிமயமாக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story