தேனியில் ஆட்டோ மீது லாரி மோதி கோர விபத்து - 2 பேர் பலி
தேனியில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேனி,
தேனியில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மின்வாரிய ஊழியர்
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி ஜவஹர் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36). இவர் தேனி மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணியாற்றி வந்தார். இவருடைய உறவினர் வீட்டு வசந்த விழா பூதிப்புரம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இதில் கண்ணன் கலந்துகொண்டார்.
அங்கு அவருடைய நண்பர்களை சந்தித்து பேசி கொண்டிருந்தார். பின்னர் தனது நண்பரான தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்த கணேசன் (45) என்பவர் அங்கிருந்து தனது வீட்டுக்கு அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (20) என்பவரின் ஆட்டோவில் புறப்பட்டார். அப்போது அவரை இறக்கி விடுவதற்காக அதே ஆட்டோவில் கண்ணன், அவருடைய நண்பர்களான ஜவஹர் நகரை சேர்ந்த மணிகண்டன் (35), பழனிச்சாமி (36), நாகராஜ் (21) ஆகியோரும் பயணம் செய்தனர்.
ஆட்டோ-லாரி மோதல்
தேனி பங்களாமேடு திட்டச்சாலை வழியாக மதுரை சாலைக்கு சென்ற அவர்கள், அங்கிருந்து பழைய டி.வி.எஸ். சாலைக்கு திரும்ப முயன்றனர். அப்போது மதுரை சாலையில் நேரு சிலை சிக்னல் பகுதியில் இருந்து வந்த லாரி, ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போன்று நொறுங்கியது. ஆட்டோவில் இருந்தவர்கள் வெளியே தூக்கி வீசப்பட்டனர். இதில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு தேனி போலீசாரும் விரைந்து வந்தனர். விபத்தில் காயம் அடைந்த கண்ணன், மணிகண்டன், பழனிச்சாமி, கணேசன், நாகராஜ், ஆட்டோ டிரைவர் சதீஷ்குமார் ஆகிய 6 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
2 பேர் பலி
அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மணிகண்டன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
இந்த விபத்து குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த கொண்டாரெட்டி (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் ஆட்டோ டிரைவர் ஆவார். தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு நண்பர்களுடன் ஆட்டோவில் வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் ஒரே பகுதியை சேர்ந்த 2 பேர் பலியான சம்பவம் ஜவஹர் நகர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story