கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 20 March 2022 11:24 PM IST (Updated: 20 March 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி சண்டே மார்க்கெட், கடற்கரையில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

புதுச்சேரி சண்டே மார்க்கெட், கடற்கரையில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள் படையெடுப்பு
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். புதுவையில் கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த சில வாரங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இ்ன்று விடுமுறை தினம் என்பதால் அண்டை மாநிலங்களை சோந்த சுற்றுலா பயணிகள் புதுவைக்கு படையெடுத்தனர். இதனால் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் முழுவதும் நிரம்பின.
போக்குவரத்து நெரிசல்
புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குடும்பம் குடும்பமாக மக்கள் திரண்டனர். சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர் பட்டாளமும் புதுவையில் முகாமிட்டுள்ளனர். இதனால் புதுவை களைகட்டியது.
புதுச்சேரி தலைமை செயலகம் வரை உருவாகியுள்ள செயற்கை மணல் பரப்பில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர்.  ஒயிட் டவுன் பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் வரைந்துள்ள ஓவியங்களின் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சண்டே மார்க்கெட்
சுற்றுலா பயணிகளின் வருகையால் நகரின் முக்கிய சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கிச் சென்றனர். கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சென்றதை காண முடிந்தது.
பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம்
புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் பெரும்பாலும் பஸ் பயணத்தையே பெரிதும் விரும்புகின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலா பயணிகள் விடுதியில் தங்கியிருந்து சுற்றுலா இடங்களுக்கு செல்வார்கள். விடுமுறை முடிந்தவுடன் மீண்டும் அவரவர் சொந்த பணிகளை மேற்கொள்ள புறப்பட்டு செல்வார்கள். 
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக புதுவையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இ்ன்று இரவு விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பியதால் புதுவை பஸ்நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சென்னை, பெங்களூரு செல்லும் பஸ்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. பஸ்களில் இருக்கை பிடிப்பதற்காக சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் முண்டியடித்தனர். எனவே வார இறுதி நாட்களில் கூடுதல் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story