அந்தமான் நிக்கோபார் தீவு அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்..!


image courtesy: windy.com
x
image courtesy: windy.com
தினத்தந்தி 21 March 2022 2:24 PM IST (Updated: 21 March 2022 2:24 PM IST)
t-max-icont-min-icon

அந்தமான் நிக்கோபார் தீவு அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23.03.2022 முதல் 25.03.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: 
21.03.2022, 22.03.2022: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.

குறிப்பு: நேற்று காலை தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 8.30 மணியளவில் வடகிழக்கு அந்தமான் நிக்கோபார் தீவு-போர்ட்பிளேரிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர் கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

21.03.2022: அந்தமான் கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

22.03.2022: மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வடக்கு அந்தமான் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

23.03.2022: மத்திய கிழக்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல், வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Next Story