தஞ்சாவூர்: ஓய்வு பெற்ற போலீஸ்காரரை தாக்கி 15 லட்சம் வழிப்பறி...!
தஞ்சாவூர் அருகே ஓய்வு பெற்ற போலீஸ்காரரை தாக்கி ரூ.15 லட்சத்தை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்,
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அடுத்த பாப்பாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 65) . இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஆவார். இவருடைய மகள் தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் லெட்சுமணன் பிள்ளையார்பட்டியில் உள்ள அவருடைய மகள் வீட்டுக்கு இன்று வந்துள்ளார். பின்னர் ரூ.15 லட்சம் பணத்துடன் கறம்பக்குடியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் புறப்பட்டார்.
அப்போது மருங்குளம் - கறம்பக்குடி சாலையில் கோபால் நகர் அருகே செல்லும் போது லெட்சுமணின் ஸ்கூட்டருக்கு பின்னால் வந்த 2 மர்மநபர்கள் ஸ்கூட்டரை வழிமறித்து நிறுத்தினர். இதனையடுத்து பைக்கில் வந்த இரண்டு பேரும் திடீரென லட்சுமணனை கட்டையால் சரமாரியாக தாக்கி லெட்சுமணன் வைத்திருந்த ரூ.15 லட்சத்தை பறித்தனர். இதைத்தொடர்ந்து லெட்சுமணின் ஸ்கூட்டரையும் மர்ம நபர்கள் பிடுங்கி கொண்டு பணத்துடன் தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து லட்சுமணன் வல்லம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் லெட்சுமணனை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஓய்வு பெற்ற போலீஸ்காரரிடம் நடைபெற்று உள்ள வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Related Tags :
Next Story