"திருமண நிதி உதவித் திட்டத்தில் முறைகேடுகள்" - முதல் அமைச்சர் விளக்கம்
திருமண நிதி உதவித் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக, தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்மூலம் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில் படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றலை தடுக்கும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் மாணவிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று சட்டசபையில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது, இதில் அதிமுக எம்.எல்.ஏ பாண்டியன் தாலிக்கு தங்கம் திட்டத்தால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்ததாக தெரிவித்தார். தற்போது இந்த திட்டம் ஏன் நிறுத்தப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்த திட்டத்திற்கு சுமார் 1.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது என்றும் தாலிக்கு தங்கம் வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததும் தெரிய வந்தது என்று குறிப்பிட்டு பேசினார்.
அதைத் தொடர்ந்து பேசிய முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், இதற்கு விளக்கம் அளித்தார், அதில் 1989-ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு முதல் முதலாக 5,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டதாகவும், 2011-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் தான் திருமண உதவிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவித்து செயல்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இந்த திட்டத்தை இடையில் நிறுத்திய அதிமுக அரசு பின்னர் மீண்டும் செயல்படுத்தியதாக கூறினார். அதிமுக அரசு திருமண உதவியை, 50 ஆயிரம் ரூபாயும் 8 கிராம் தங்கம் என உயர்த்தி வழங்கியதாக தெரிவித்தார். இந்த நிலையில் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்ததில் அதில் 24.5 சதவீத பயனாளிகள் மட்டுமே தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் முறைகேடுகள் நடந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டு 43 வழக்குகள் பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் உயர்நிலைக் கல்வியில் பெண்கள் சேர்வது 46 சதவீதம் மட்டுமே இருப்பதால் அதை சரி செய்ய வேண்டும் என்பதால் தான் தாலிக்கு தங்கம் திட்டம் , பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். பெண் உரிமை கொள்கையின் மறுவடிவம் தான் இந்த நிதி உதவி வழங்கும் திட்டம் எனவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story