மண்வளம் பாதுகாக்க விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணம் லண்டனில் ஜக்கி வாசுதேவ் தொடங்கினார்


மண்வளம் பாதுகாக்க விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணம் லண்டனில் ஜக்கி வாசுதேவ் தொடங்கினார்
x
தினத்தந்தி 22 March 2022 3:21 AM IST (Updated: 22 March 2022 3:21 AM IST)
t-max-icont-min-icon

மண்வளம் பாதுகாக்க விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணத்தை லண்டனில் ஜக்கி வாசுதேவ் நேற்று தொடங்கினார். 30 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து இந்தியா திரும்புகிறார்.

சென்னை,

உலக அளவில் மண் வளத்தை பாதுகாக்க சட்டங்கள் இயற்றவும், அதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை ‘ஈஷா’ அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கினார்.

புகழ்பெற்ற டிரபல்கர் சதுக்கத்தில் இந்த மோட்டார் சைக்கிள் பயணத்தை 7 வயது சிறுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

லண்டனில் இருந்து புறப்பட்ட ஜக்கி வாசுதேவ் இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக 30 ஆயிரம் கி.மீ. தனி ஆளாக மோட்டார் சைக்கிளில் 3 கண்டங்களில் 27 நாடுகளுக்கு பயணித்து இந்தியா திரும்ப உள்ளார்.

இப்பயணத்தில் அவர் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சுற்றுச்சூழல் வல்லுனர்கள் என பல தரப்பட்ட பிரபலங்களுடன் மண் வள பாதுகாப்பு குறித்து கலந்துரையாட உள்ளார்.

350 கோடி மக்களிடம்...

இதுதவிர, மே மாதம் ஐவரி கோஸ்ட் நாட்டில் ஐ.நா.வின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு நடத்தும் சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில் ஜக்கி வாசுதேவ் உரையாற்றுகிறார். இதில் 170-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள். மேலும், டாவோஸில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டிலும் அவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.

மண் காப்போம் இயக்கத்தின் மூலம் உலகம் முழுவதும் சுமார் 350 கோடி மக்களிடம் மண் வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த வாரம் 6 கரீபியன் நாடுகள் தங்கள் நாடுகளில் மண் வளத்தை மேம்படுத்த மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிட்டத்தக்கது.

ஐ.நா.வின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் ஆய்வின்படி, தற்போது உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், 2050-ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள 90 சதவீதம் மண், அதன் வளத்தை இழந்து விடும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், உலகளவில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பஞ்சம் மற்றும் பட்டினிச் சாவுகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல் ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story