ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம்


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 22 March 2022 4:49 AM IST (Updated: 22 March 2022 4:49 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், இன்று மீண்டும் ஆணையத்தில் ஆஜராகிறார்.

சென்னை,

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்த போராட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த விசாரணை ஆணையம் சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள கலச மஹாலில் இயங்கி வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இந்த ஆணையம் இதுவரை சசிகலாவின் உறவினர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் உள்பட 154 பேரிடம் விசாரணை நடத்தியது.

போர்க்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் போர்க்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்துவதற்காக அவருக்கு 8 முறை ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால், பல்வேறு காரணங்களால் அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையே சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் 21-ந் தேதி (நேற்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. தற்போது தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருவதால் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராவாரா? அல்லது விலக்கு பெறுவாரா? என்ற சந்தேகம் நிலவியது.

இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார். எனவே அவர், விசாரணை ஆணையத்தில் இந்த முறையும் ஆஜராக மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சட்டசபையில் கேள்வி-பதில் நேரம் முடிந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டார்.

ஆணையத்தில் ஆஜர்

அங்கிருந்து அவர் நேராக சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் இயங்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜராக காலை 11.15 மணியளவில் வருகை தந்தார். அங்கு அவருடைய ஆதரவாளர்கள் அதிகளவில் திரண்டிருந்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார். அதேபோன்று ஆணையம் தரப்பில் வக்கீல் நிரஞ்சன், சசிகலா தரப்பில் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோரும் ஆணையத்தில் ஆஜராகி இருந்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆணையத்தின் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி ஜெயலலிதா எதற்காக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்?

பதில்:- அவர் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்று எனக்கு தெரியாது. அப்போது நான் என்னுடைய சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் இருந்தேன். என் உதவியாளர் நள்ளிரவு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். அடுத்த நாள் பிற்பகலில் தான் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு நான் சென்றேன். அங்கிருந்த அப்போதைய தலைமை செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன்.

கேள்வி:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது? எந்தெந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்?

பதில்:- அதுபற்றிய விவரங்கள் எனக்கு தெரியாது.

ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு...

கேள்வி:- ஜெயலலிதாவை கடைசியாக எப்போது நேரில் பார்த்தீர்கள்...

பதில்:- ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரெயில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரை நேரில் பார்த்தேன். அதன் பின்னர் அவரை பார்க்கவில்லை.

கேள்வி:- ஜெயலலிதாவுக்கு என்னென்ன உடல் உபாதைகள் இருந்தது?

பதில்:- அவருக்கு உடலில் சர்க்கரை அளவு அதிகம் இருந்தது மட்டும் தெரியும். வேறு எதுவும் எனக்கு தெரியாது.

கேள்வி:- விசாரணை ஆணையம் அமைக்க கோரியது ஏன்?

பதில்:- ஜெயலலிதா சாவில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேக எண்ணத்தின் அடிப்படையிலே ஆணையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு அமைக்கப்பட்டது. அப்போதைய துணை முதல்-அமைச்சர் என்ற அடிப்படையில் விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டேன்.

கடைசி நேர சிகிச்சை

கேள்வி:- ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது நடந்த காவிரி நீர் பங்கீடு தொடர்பான கூட்டம் பற்றி தெரியுமா?

பதில்:- அதுபற்றி எதுவும் தெரியாது. அதுதொடர்பான அறிக்கை வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

கேள்வி:- ஜெயலலிதாவிற்கு கடைசியாக இருதய பாதிப்பு ஏற்பட்ட போது அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி தெரியுமா?

பதில்:- அந்த சமயத்தில் நடந்த சிகிச்சை பற்றி தெரியாது. யார் முடிவின்படி டாக்டர்கள் ஜெயலலிதாவுக்கு இருதய சிகிச்சை அளித்தார்கள் என்பதும் தெரியாது.

கேமரா அகற்றம் ஏன்?

கேள்வி:- ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை அகற்றியது ஏன்?

பதில்:- கண்காணிப்பு கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

இதை அவரது வாக்குமூலமாக ஆணையம் பதிவு செய்தது.

இன்று மீண்டும் ஆஜர்

ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்னும் 20-க்கும் மேற்பட்ட கேள்விகளை ஆணையம் தரப்பில் கேட்க வேண்டியது உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஆணையத்தில் ஆஜராகிறார்.

ஆணையத்தின் விசாரணை முடிந்ததும் சசிகலா, அப்பல்லோ தரப்பில் ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

முன்னதாக காலை 10.30 மணிக்கு சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆணையத்தில் ஆஜராகி இருந்தார். அவர் தனது வாக்குமூலத்தில், ‘அப்போலோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை சசிகலா மட்டுமே உடன் இருந்து பார்த்துக்கொண்டார். 75 நாளில் ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவை நான் பார்த்திருக்கிறேன். அதுவும் கண்ணாடி வழியாகத்தான் பார்த்திருக்கிறேன்' என கூறி உள்ளார்.

Next Story