சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா - திரளான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி வழிபாடு
பண்ணாரி அம்மன் கோயிலில் திரளான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி வழிபாடு செய்து வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் ஈரோடு, கோவை, சேலம், ஊட்டி மற்றும் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுமார் 5 லட்சம் பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு விழாவுக்காக கடந்த 8-ந் தேதி இரவு பூச்சாட்டப்பட்டது. அன்று முதல் பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் சிலை சப்பரத்தில் வைக்கப்பட்டு வீதிஉலா நடந்தது. 15-ந் தேதி இரவு கம்பம் சாட்டு விழா நடந்தது. அன்று முதல் இந்த கம்பத்தை சுற்றி கடந்த 20-ந் தேதி வரை ஒவ்வொரு நாள் இரவும் மலைவாழ் மக்கள் பீனாட்சி வாத்தியத்திற்கு ஏற்ப நடனம் ஆடி மகிழ்ந்தார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. குண்டத்துக்கு பூசாரி முதலில் பூஜை செய்து தீ மிதித்தார். அதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் பண்ணாரி அம்மனுக்கு அக்னி குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். தீ மிதிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். மதியம் 2 மணி வரை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
குண்டம் திருவிழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நாளை (புதன்கிழமை) புஷ்ப ரதம் கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், 25-ந் தேதி திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. 28-ந் தேதி நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா முடிவடைகிறது.
Related Tags :
Next Story