பணத்தை மறைத்து வைத்திருப்பதாக நினைத்து தாயை அடித்து கொன்ற மகன்
திருவட்டார் அருகே மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கூட்டுறவு சங்க கடன் பணத்தை மறைத்து வைத்திருப்பதாக நினைத்து அடித்து கொன்றதாக கைதான மகன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.
திருவட்டார்,
திருவட்டார் அருகே உள்ள செப்பள்ளிவிளையை சேர்ந்தவர் தேவராஜ் (வயது72). இவருடைய மனைவி சரோஜினி (70), மாற்றுத்திறனாளி. இவர்களது ஒரே மகன் விஜயன் (48), ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று இரவு விஜயன் தனது தாயார் சரோஜினியிடம் பணம் கேட்டு தகராறு செய்து கட்டையால் அடித்து கொன்றார்.
இதையடுத்து அவரை திருவட்டார் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனது பெற்றோருக்கு ஒரே மகன். பால்வெட்டும் தொழில் செய்து வருகிறேன்.
எனக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. அடுத்த ஆண்டே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றார். எனது அப்பா மனநிலை சரியில்லாதவர். அம்மா கால்கள் செயல் இழந்த மாற்றுத்திறனாளி. எனது அம்மா என்னை மனைவி குழந்தையுடன் வாழ தகுதியற்றவன், கால் முடியாத நிலையில் நான் உனக்கு சமைத்து போட வேண்டுமா? என திட்டுவார். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை அம்மா வாங்கும்போது அந்த பணத்தை மதுக்குடிக்க கேட்டு சண்டை போடுவேன்.
இந்தநிலையில் அருவிக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இருந்து ரூ.9 ஆயிரம் கடன் கிடைத்தது. அந்த பணத்தை வாங்கி மது குடித்து விட்டு மீதி பணத்தை வீட்டில் வைத்தேன். பின்னர் குளக்கரைக்கு வந்து மீண்டும் குடித்துவிட்டு தூங்கினேன். நள்ளிரவு வீட்டிற்கு சென்று வீட்டில் பணம் வைத்த இடத்தில் தேடினேன். அங்கே பணம் இல்லை. நான் வைத்திருந்த பணத்தை பார்த்தாயா? என அம்மாவிடம் கேட்டேன். அப்போது அவர், இல்லை என்றும் நீ பணத்தை எங்கேயாவது தொலைத்திருப்பாய் என்றும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நான் எனது அப்பாவும் சரியில்லை. அம்மாவும் சரியில்லை, ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம் என கடன் வாங்கி வைத்திருந்த பணத்தை அம்மா எடுத்து மறைத்து வைத்துவிட்டார் என நினைத்து மரக்கட்டையை எடுத்து தலையில் அடித்து கொன்று விட்டு தப்பி ஓடினேன். இதையடுத்து வெளியூர் செல்ல முயன்ற போது போலீசார் என்னை கைது செய்தனர்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து விஜயனை போலீசார் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story