கீரனூர் அருகே பயங்கரம்: அரசு வேலைக்காக தந்தையை கழுத்தை நெரித்து கொன்ற மகன் கைது உடந்தையாக இருந்த துப்புரவு பணியாளரும் சிக்கினார்


கீரனூர் அருகே பயங்கரம்: அரசு வேலைக்காக தந்தையை கழுத்தை நெரித்து கொன்ற மகன் கைது  உடந்தையாக இருந்த துப்புரவு பணியாளரும் சிக்கினார்
x
தினத்தந்தி 22 March 2022 11:38 PM IST (Updated: 22 March 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

கீரனூர் அருகே அரசு வேலைக்காக தந்தையை கழுத்தை நெரித்து கொன்ற மகனையும் அவருக்கு உடந்தையாக இருந்த துப்புரவு பணியாளரையும் போலீசார் கைது செய்தனர்.

கீரனூர்:
துப்புரவு பணியாளர் 
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே திடீர் நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 60). இவர், கீரனூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மகன் பழனி (35). 
இந்நிலையில் கடந்த 19-ந் தேதி கருப்பையா அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்து விட்டதாக பழனி கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருப்பையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  
இந்நிலையில் பிரேத பரிேசாதனை அறிக்கை வந்தது. அதில் கருப்பையா குடித்த மதுவில் விஷம் கலந்து இருந்ததாகவும், கழுத்து நெரிக்கப்பட்டு இருந்ததாகவும் ெதரிவிக்கப்பட்டு இருந்தது. இதனைதொடர்ந்து கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கழுத்தை நெரித்து கொலை 
 இறந்து போன கருப்பையா வருகிற 31-ந் தேதி துப்புரவு பணியில் இருந்து ஓய்வுபெற இருந்தார். பணியில் இருக்கும்போதே இறந்தால் வாரிசுக்கான வேலை தனக்கு கிடைக்கும் என்ற நோக்கத்தில் அவரது மகன் பழனி தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதுபற்றி பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் ஆனந்தன் (48) என்பவரிடம் தெரிவிக்க அவரும் அதற்கு சம்மதித்தார். 
இதையடுத்து சம்பவத்தன்று பழனியும், ஆனந்தனும் மதுவில் குருணை மருந்தை (விஷம்) கலந்து கருப்பையாவுக்கு குடிக்க கொடுத்துள்ளனர். பின்னர் அவரை பேரூராட்சிக்கு பின்புறம் உள்ள மைதானத்தில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதற்கிடையே கருப்பையா இறந்துவிட்டாரா என்பதை உறுதி செய்து கொள்ள அன்று நள்ளிரவு 2 மணிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது கருப்பையா உடலில் உயிர் இருந்துள்ளது. உடனே அவர்கள் 2 பேரும் சேர்ந்து கருப்பையாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
மகன்-துப்புரவு பணியாளர் கைது 
இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றினர். பின்னர் பழனி, ஆனந்தன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசு வேலைக்காக மகனே தந்தையை கொலை செய்துவிட்டு இயற்கை சாவு என நாடகமாடிய சம்பவம் கீரனூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story