வங்கிக்குள் புகுந்து பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு கணவர் வெறிச்செயல்


வங்கிக்குள் புகுந்து பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 23 March 2022 1:34 AM IST (Updated: 23 March 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

வங்கிக்குள் புகுந்து பெண்ணை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கணவர் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி,

தேனி மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரேமலதா(30). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரேமலதா, தனது குழந்தைகளுடன் மதுரையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். வெள்ளைச்சாமி மேட்டுப்பட்டியில் தனது தாயுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரேமலதா, மேட்டுப்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்திருந்த தனது தங்க நகையை திருப்பி மறு அடகு வைப்பதற்காக நேற்று காலை அந்த வங்கிக்கு வந்தார்.

அரிவாள் வெட்டு

இதுபற்றி அறிந்த வெள்ளைச்சாமி, தனது தாய் அமுதா மற்றும் உறவினர்கள் சுப்புலட்சுமி, ஜெகதீஸ்வரன், சாந்தி ஆகியோருடன் வங்கிக்கு சென்றார். அங்கு வெள்ளைச்சாமி தனது மனைவியிடம் தகராறு செய்தார். திடீரென தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரேமலதாவை சரமாரியாக வெட்டினார். இதனை பார்த்த வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

5 பேருக்கு வலைவீச்சு

அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த பிரேமலதா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து வெள்ளைச்சாமி உள்பட 5 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். பிரேமலதா சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வெள்ளைச்சாமி, அவரது தாயார் அமுதா உள்பட 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை வங்கியில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Next Story