2 மாணவிகளை கடத்தி பாலியல் பலாத்காரம்; டியூசன் ஆசிரியர் கைது


2 மாணவிகளை கடத்தி பாலியல் பலாத்காரம்; டியூசன் ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 23 March 2022 2:16 AM IST (Updated: 23 March 2022 2:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இருந்து குமரி வரை காதல் வேட்டை நடத்தி 2 மாணவிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

கோவை,

சேலம் ஆத்தூர் அருகே உள்ள தெடாவூர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது40). அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக 2019-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து அவர் நிதி நிறுவனம் தொடங்கி, பொதுமக்களிடம் பணம் மோசடி செய்ததால் மணிமாறன் மீது சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார்.

மாணவிக்கு டியூசன்

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இதற்காக அந்த பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் 11-ம் வகுப்பு படிக்கும் தனது 16 வயது மகளை கணித பாடம் கற்றுக்கொடுக்கும்படி மணிமாறனிடம் டியூசனுக்கு அனுப்பியுள்ளார். அந்த மாணவியிடம் மணிமாறன் தனது மன்மத சேட்டையை காட்டினார். இதையடுத்து தனது வலையில் சிக்கிய அந்த மாணவியை மணிமாறன் கடத்தி சென்றார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் மணிமாறன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

மேலும் மணிமாறனை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டது. மாணவியுடன் பல்வேறு இடங்களில் சுற்றிய மணிமாறன் போலீசார் கண்களில் சிக்காமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்தார்.

பின்னர் அந்த மாணவியுடன் குமரி மாவட்டம் சுசீந்திரத்துக்கு சென்றார். அங்கு இருவரும் புதுமண தம்பதி என்று கூறி ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

கல்லூரி மாணவியையும் வீழ்த்திய காதல் மன்னன்

இந்த நிலையில் அவர்கள் இருவரும் குடியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளரின் மகளான 2-ம் ஆண்டு கல்லூரி மாணவியை மணிமாறன் காதல் வலை வீசி மயக்கினார். அந்த மாணவியையும் கடத்தி மணிமாறன் தலைமறைவானார்.

இதற்கிடையே கல்லூரி மாணவி காணாததால் அவரின் பெற்றோர் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி சுசீந்தரம் போலீசில் புகார் அளித்தனர். இதனிடையே அந்த 2 மாணவிகளையும் கடத்திய மணிமாறன் பல்வேறு இடங்களுக்கு அவர்களை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

திருப்பதியில் கைது

இந்த நிலையில் மணிமாறன் ஆந்திரமாநிலம் திருப்பதியில் தங்கியிருப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் தனிப்படையினர் திருப்பதி சென்று மணிமாறனை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த 2 மாணவிகளையும் மீட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கோவைக்கு அழைத்து வந்தனர்.

மணிமாறன் மீது கடத்தல், பாலியல் பலாத்காரம், மிரட்டல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் மணிமாறன் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவர் என்பதும், அந்த பெண்கள் கருத்து வேறுபாடு காரணமாக மணிமாறனை பிரிந்து சென்றதும் தெரியவந்தது. மாணவிகளை கடத்தி சென்று சுற்றியபோது போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக மணிமாறன் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வந்துள்ளார்.

வீதி, வீதியாக டீ விற்ற கல்லூரி மாணவி

மணிமாறன் திருப்பதியில் தங்கி இருந்தபோது கல்லூரி மாணவி வீட்டில் இருந்து எடுத்து வந்த பணம், நகைகள் விரைவாக காலியானது. இதனால் செலவுக்கு பணம் இன்றி தவித்த மணிமாறன், கல்லூரி மாணவியை டீ விற்க சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். வேறு வழியின்றி அந்த கல்லூரி மாணவியும் சைக்கிளில் வீதி, வீதியாக சென்று டீ விற்பனை செய்து உள்ளார். இதனிடையே பணத்தேவை காரணமாக மாணவிகள் இருவரையும் விபசாரத்தில் தள்ள மணிமாறன் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Next Story