கொரோனா 4-வது அலை வருமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்


கொரோனா 4-வது அலை வருமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
x
தினத்தந்தி 23 March 2022 4:40 AM IST (Updated: 23 March 2022 4:40 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா 4-வது அலை வருமா? வராதா? என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

சென்னை,

சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட ஜாபர்கான்பேட்டை சென்னை உயர் நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா 4-ம் அலை

தமிழகத்தில் 10-ம் வகுப்பில் 100 சதவீதம் வெற்றியை கொடுத்த பள்ளியில் இந்த பள்ளியும் ஒன்று. இந்த பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக்க வேண்டும் என்று பல நாட்களாக பொதுமக்கள் கேட்டு வரும் நிலையில், போதிய இடம் இல்லாததால் அது முடியவில்லை. மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 39 பள்ளிகளை தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு, ரூ.126 கோடியில் இதன் பணி நடந்து வருகிறது.

விரைவில் அது மாணவர்கள் பயன்பாட்டிற்கு வரும். தமிழகத்தில் மொத்தமாக 12 முதல் 14 வயதுடையவர்கள் 21.21 லட்சம் பேர் உள்ள நிலையில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 6 லட்சத்து 29 ஆயிரத்து 100 (29.66 சதவீதம்) பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல, 15 முதல் 18 வயதுடையவர்களில் 28.37 லட்சம் பேருக்கு (84.81 சதவீதம்) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4-ம் அலை வருமா? வராதா? என்று தெரியவில்லை. ஆனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.

தமிழகத்தில் 22 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக உள்ளது. அதேபோல கடந்த 10 நாட்களாக இறப்பு எண்ணிக்கையும் பூஜ்ஜியமாக உள்ளது. ஆனாலும், பொதுமக்கள் தொற்றில் இருந்து விடுபட்டு விட்டோம் என அலட்சியமாக இருக்கக்கூடாது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அடுத்த 3 மாதத்திற்கு தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மேலும், அருகே இருக்கும் மாநிலங்கள், நாடுகளில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்தவில்லை

தமிழகத்தில் இன்னும் 51 லட்சம் பேர் தற்போது வரையும் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் இருக்கிறார்கள். அதேபோல 1.32 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள். முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தி கொள்ளாமல் இருப்பவர்கள் குறித்து முதல்-அமைச்சர் இன்று (நேற்று) உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் டி.சினேகா, எஸ்.ஷேக் அப்துல் ரகுமான் உள்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்.

Next Story