தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் முதல்-அமைச்சர் உறுதி


தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் முதல்-அமைச்சர் உறுதி
x
தினத்தந்தி 23 March 2022 5:28 AM IST (Updated: 23 March 2022 5:28 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தேர்தல் வாக்குறுதி கள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது அசோக்குமார் (கிருஷ்ணகிரி, அ.தி.மு.க.) பேசியதும், அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசியதும் வருமாறு:-

அசோக்குமார்:- எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது தமிழகத்தின் கடன் அளவு 4.85 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்த பட்ஜெட் வார்த்தை ஜாலமாக உள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட, 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், நீர்நிலை பாதுகாப்புக்காக 75 ஆயிரம் பேர் பணிநியமனம், சாலைப்பணியாளர்கள் நியமனம், திருக்கோவில் சொத்துகளை பாதுகாப்பதற்கு பணியாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

அமைச்சர் சேகர்பாபு:- திருக்கோவில் சொத்துகளை பாதுகாப்பதற்காக 25 ஆயிரம் பணியாளர் தேர்வு குறித்து தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2,500 பேரை தேர்வு செய்யும் பணியை விரைவிலேயே தொடங்கும்படி முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

காமராஜரின் திட்டம்

அமைச்சர் எ.வ.வேலு:- அது இல்லை, இது இல்லை என்று தேர்தல் அறிக்கையில் உள்ளதை பற்றி கூறுகிறீர்கள். இந்த ஆட்சிக்கு 5 ஆண்டு காலம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. எனவே அறிவிப்புகளை பகிர்ந்துதான் பட்ஜெட்டில் அறிவிக்க முடியும். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அறிவிப்புகளையெல்லாம் ஒரே பட்ஜெட்டில் செய்ய முடியாது.

உங்கள் ஆட்சியில் அப்படி செய்தீர்களா? எந்த ஆட்சியிலும் செய்ய முடியாது. இன்னும் 4 ஆண்டுகளில் கட்டாயம் 100 சதவீத அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும்.

அசோக்குமார்:- இருசக்கர வாகன திட்டம், பரிசு பெட்டக திட்டம், அம்மா சிமெண்டு திட்டம் ஆகியவற்றையும் செயல்படுத்த வேண்டும். எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்தினால்தான் கிராமத்தில் உள்ள பல லட்சம் பேர் உயர் கல்வி பயில முடிந்தது.

சபாநாயகர் அப்பாவு:- அதற்கு முன்பு மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார்.

அமைச்சர் துரைமுருகன்:- அதற்கு முன்னதாக சென்னை மாநகராட்சி பகுதியில் மதிய உணவு வழங்கப்பட்டது.

படிப்படியாக நிறைவேற்றப்படும்

அசோக்குமார்:- 70 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றி இருப்பதாக முதல்-அமைச்சர் கூறினார். அப்படி இருந்தால் இந்த பட்ஜெட்டை நாங்களும் வரவேற்றிருப்போம். குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை. 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்பதும் அறிவிக்கப்படவில்லை.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- அ.தி.மு.க. உறுப்பினர் ஒரு பெரிய பட்டியலை வரிசைப்படுத்தி, இதையெல்லாம் தேர்தல் அறிக்கையிலே சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை, ஏன் செய்யவில்லை? என்று கேட்கிறார். நீங்கள் தொடர்ந்து இரண்டு முறை, அதாவது 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள். நீங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் முழுமையாக செய்து முடித்து விட்டீர்களா?

அப்படி செய்து முடித்திருந்தால், சொல்லுங்கள். பல வாக்குறுதிகளை நீங்கள் அந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றவேயில்லை. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அது மக்களுக்கும் நன்றாக தெரியும்.

நான் இப்போது சொல்கிறேன். நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கக்கூடிய வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை, அதிலும் குறிப்பாக இந்த 10 மாதங்களில், நாங்கள் செய்திருக்கக்கூடிய சாதனைகளை போல் எந்த ஆட்சியிலும் செய்யவில்லை என்பதை நான் உறுதியோடு சொல்ல முடியும். நீங்கள் என்னென்ன வாக்குறுதிகளை கேட்டிருக்கிறீர்களோ, அவற்றையெல்லாம் பட்ஜெட்டிலும் சொல்லியிருக்கிறோம். நிச்சயமாக, உறுதியாக, படிப்படியாக அவை நிறைவேற்றப்படும். அதுதான் எங்களுடைய லட்சியம், அதுதான் எங்களுடைய கொள்கை.

அவை உறுதிமொழி என்ன ஆனது?

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்:- தேர்தல் வாக்குறுதி என்பது பொது வெளியில் கொடுக்கக்கூடிய உறுதி. அதை மனித மாண்புகளையும், பெருமையையும் காப்பாற்றுவதற்காக அதை நாம் செய்ய வேண்டும். ஆனால் சட்ட அமைப்பின்படி தேர்தலுக்காக கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது.

ஆனால் அவையில் அளிக்கக்கூடிய, அவை உரிமைக்கு உட்பட்ட உறுதிமொழியை உங்களால் நிறைவேற்ற முடியவில்லை. அவையில் அளிக்கும் உறுதிமொழி, சட்ட அமைப்பின் அடிப்படையில் கட்டாயமாக செய்யப்பட வேண்டும்.

ஏற்கனவே நீங்கள் அவை விதி 110-ன் கீழ் அளித்த உறுதி மொழியில் 90 சதவீதம், அதாவது ரூ.3 லட்சம் கோடிக்கு இன்னும் எதுவுமே செய்யவில்லை. அரசாணையும் போடவில்லை, நிதியும் ஒதுக்கவில்லை. அரசியல் சட்ட அமைப்பின் அடிப்படையில் கொடுக்கும் உறுதியை செய்யாதவர்கள், எங்களிடம் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை? என்று கேட்கிறீர்கள். 10 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை கணக்கிட்டால் 10 சதவீதமாவது முடிந்திருக்குமா? என்பது தெரியவரும். வெளியே கொடுக்கும் வாக்குறுதிக்கும், அவையில் 110-ம் விதியின் கீழ் கொடுக்கும் வாக்குறுதிக்கும் வித்தியாசம் உள்ளது.

அவை விதி 110-ன் கீழ் எத்தனை அறிவிப்பு வெளியிடப்பட்டது? எத்தனை அறிவிப்பிற்கு அரசாணை போடப்பட்டது? என்பதையெல்லாம் இந்த அவையில் நான் அறிவித்திருக்கிறேன். பல திட்டங்களுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. அது அரசு வெளியிட்ட அறிக்கை. மீண்டும் அதை அவையில் வைக்கிறேன்.

நம்பிக்கை மோசடி

அசோக்குமார்:- தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று முதல்-அமைச்சர் கூறினார். ஆனால் நீங்கள் வெளியில் சொல்வது வேறு என்கிறீர்கள்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்:- நான் கூறிய கருத்தை திசை திருப்புகிறார்.

சபாநாயகர்:- அவைக்கு தேவையான கருத்தை மட்டும் கூறுங்கள்.

அமைச்சர் துரைமுருகன்:- வெளியில் சொல்வது தேர்தல் அறிக்கை. இந்த அவையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் அது நம்பிக்கை மோசடி. உங்கள் ஆட்சியில் 110-ம் அவை விதியின் கீழ் அம்மையார் படித்ததையெல்லாம் செய்தார்களா? அதுபற்றி விவாதிக்க தயாரா? நாளை அரை மணிநேரம் விவாதிக்கலாமா?

எதிர்க்கட்சி கொறடா வேலுமணி:- 110-ம் அவை விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் 90 சதவீதத்தை நிறைவேற்றினோம். சில திட்டங்கள் பல காரணங்களுக்காக கோர்ட்டில் வழக்கில் உள்ளன. 2011-ம் ஆண்டு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதால் 2016-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தோம். மக்கள் கேட்கும் வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பதைத்தான் அசோக்குமார் கேட்கிறார்.

தி.மு.க.விடம் கேள்வி

அமைச்சர் ஐ.பெரியசாமி:- தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு ‘யூத் பிரிகேட்’ என்று பணி அளிக்கப்படும் என்று இந்த அவையில் அம்மையார் சொன்னார்கள். யாருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது? பட்டியலை கொடுங்கள்.

அமைச்சர் சக்கரபாணி:- 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் தரப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். சென்னையில் 10 பேருக்கு கொடுத்தனர். தமிழகம் முழுவதும் அதை தரவில்லை.

எதிர்க்கட்சி கொறடா வேலுமணி:- 2006-ம் ஆண்டு கொடுத்த வாக்குறுதிகளை 2011-ம் ஆண்டுக்குள் முழுவதும் நிறைவேற்றி விட்டீர்களா?.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story