மண்ணுளிப் பாம்பை வீட்டில் பதுக்கி வைத்து இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன்..!
மண்ணுளிப் பாம்பை போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் வீட்டை உடைத்து வனத்துறையினர் மீட்டனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவர் இறந்துவிட்டார். இவரது மகன் அரவிந்த் (வயது35). இவர் தற்போது நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது வீட்டை தற்போது பராமரித்து வரும் நிலையில், வீட்டுக்குள் பமண்ணுளி பாம்பு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர்கள் வீட்டில் சோதனை செய்ய விரைந்தனர். அப்போது அவரது வீடு உள் பக்கமாகவும் வெளிப்பக்கமாகவும் பூட்டப்பட்டு இருந்தது. இது தொடர்ந்து கன்னியாகுமரி கிராம நிர்வாக அதிகாரி பரத் அருண், கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் முன்னிலையில் அவரது வீட்டை வனத்துறையினர் உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு உள்ள ஒரு அறையில் தண்ணீர் பீப்பாயில் கேழ்வரகு போட்டு மண்ணுளிப் பாம்பை மூடி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்த மண்ணுளிப் பாம்பை மீட்டனர். இந்த மண்ணுளிப்பாம்பு பல கோடி ரூபாய் மதிப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மண்ணுளி பாம்பை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அரவிந்தை வனத்துறையினர் தேடி வருகிறார்கள். மேலும் வெளிநாட்டுக்கு மண்ணுளி பாம்பை கடத்திச் செல்லும் கும்பலுடன் அரவிந்துக்கு தொடர்பு இருக்கலாமா? என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள் .
Related Tags :
Next Story