காரைக்காலில் பசுமை விமான நிலையம்
காரைக்காலில் பசுமை விமான நிலையமும், புதுச்சேரியில் இரவில் விமானம் தரையிறங்கும் வசதியும் செய்துதர வேண்டும் என்று வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினார்.
காரைக்காலில் பசுமை விமான நிலையமும், புதுச்சேரியில் இரவில் விமானம் தரையிறங்கும் வசதியும் செய்துதர வேண்டும் என்று வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விமான போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது புதுவை எம்.பி. வைத்திலிங்கம் பேசியதாவது:-
விமான பராமரிப்பு பணி
ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு 3-வது முறையாக விமான போக்குவரத்தை வருகிற 27-ந்தேதி தொடங்க இருப்பதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அமைச்சரின் அழுத்தம் காரணமாக ஸ்பைஷ்ஜெட் மட்டும் அங்கு வர உள்ளது. புதுச்சேரி அரசானது விமான நிலையத்துக்கான மின்சார தேவைக்கு மானியம் வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி விமான நிலையத்துக்கு பாதுகாப்பு வசதிகளையும் செய்து கொடுக்கிறது.
விமான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு தற்போது நாட்டிற்கு வெளியேதான் நடக்கிறது. அதற்கு பதிலாக இப்பணிகளுக்காக புதுச்சேரி விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு கூடுதலாக இடம் தேவைப்பட்டால் சிறப்பு பொருளாதார மண்டலத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது புதுச்சேரியில் ஏதேனும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்தினால் புதுச்சேரி விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பசுமை விமான நிலையம்
காரைக்காலில் புகழ்பெற்ற சனீஸ்வரன் கோவில் உள்ளது. காரைக்காலில் பசுமை விமான நிலையத்தை நிறுவ ஒரு தனியார் நிறுவனத்தினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் அதற்கான அனுமதி கொடுக்கப்படவில்லை. எனவே காரைக்காலில் பசுமை விமான நிலையம் அமைக்க அனுமதி வழங்கவேண்டும்.
சரக்கு விமான சேவை புதுச்சேரிக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இரவு தரையிறங்கும் வசதியில்லை. விமானங்கள் இரவு தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டால் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும். எனவே இரவு தரையிறங்கவும், புறப்படவும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
ஏர் இந்தியா நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் வகையில் ஒரு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்.
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. பேசினார்.
Related Tags :
Next Story