நளினியின் மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு


நளினியின் மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 24 March 2022 4:20 PM IST (Updated: 24 March 2022 4:20 PM IST)
t-max-icont-min-icon

நளினி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை 2018 ஆம் ஆண்டில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், இந்த தீர்மானம் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

கவர்னர் முடிவு எடுக்காத நிலையில், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார். கவர்னரின் ஒப்புதலுக்கு காத்திராமல் தமிழக அமைச்சரவை முடிவின் அடிப்படையில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என அவர் தனது மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி வரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திய அரசியல் சாசனம் 161-வது பிரிவின் படி தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளதாகவும், அமைச்சரவையின் பரிந்துரை கவர்னரை கட்டுப்படுத்தும் என்றும் வாதிட்டார். 

இந்த பரிந்துரை மீது 42 மாதங்களாக எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாததால், தனது தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதால் நளினி இந்த வழக்கை தாக்கல் செய்திருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து நீதிபதிகள், இதுவரை பட்டியலிடப்படாத இந்த மனுவிற்கு எண்ணிட்டு, விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர். 

Next Story