கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தையை மதுபானம் கொடுத்து கொலை செய்த கொடூர தாய்....!


கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தையை மதுபானம் கொடுத்து கொலை செய்த கொடூர தாய்....!
x
தினத்தந்தி 24 March 2022 8:45 PM IST (Updated: 25 March 2022 1:06 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி அருகே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் ஒரு வயது குழந்தையை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீதா (வயது 38). இவரது கணவர் கார்த்திக் (40). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு நித்தீஷ் (3), நித்தின் (1) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதற்கிடையே கீதா, கார்த்திக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் தனியாக வசித்து வந்தனர். 

கீதா நித்தினுடன் வண்ணாரப்பேட்டையிலும், கார்த்திக் நித்திசுடன் கோவையிலும் வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த மாதம் 14-ந் தேதி குழந்தை திடீரென்று மயங்கி விழுந்தது. உடனே கீதா அந்த குழந்தையை ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் கொண்டு சென்றார்.

அப்போது அந்த குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஊட்டி நகர போலீசார் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குழந்தையின் உடலில் வெளிப்புற காயங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கீதாவுக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணம் முடிந்து உள்ளது. அதில் ஒருவருடன் சட்டப்படி திருமணம் நடைபெறாமல் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

3-வதாக கார்த்திக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கீதாவுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கார்த்திக்கை விட்டு பிரிந்த கீதா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். ஒரு வயது குழந்தை இறந்தது குறித்து பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் கீதா குழந்தையை சரியாக பராமரிக்காமல் இருந்தும், மேலும் சிலருடன் கள்ளத்தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தை கொலை செய்யப்பட்டதா, விஷம் கொடுத்து கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனை அறிவதற்காக குழந்தை நித்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவு சமீபத்தில் ஊட்டி போலீசாருக்கு கிடைத்தது. அதில் கீதா குழந்தை தொட்டிலில் தூங்குவதற்காக ஆட்டிய போது, வேண்டுமென்றே சுவற்றில் குழந்தையின் தலையை அடித்து உள்ளார். 

மேலும் தனது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக குழந்தை இருந்ததால், அடிக்கடி வெளியே சென்று வர முடியவில்லை. தாய்ப்பால் கொடுக்க வேண்டி இருந்தது.

இதனால் கீதா தனது குழந்தைக்கு உணவு அளவுக்கு அதிகமாக வாயில் ஊட்டி விட்டதுடன், மதுபானமும் கொடுத்து உள்ளார்.  இதனால் குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது ஆய்வில் தெரியவந்தது. 

இதைதொடர்ந்து கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற குழந்தையை கொலை செய்த கீதா மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story