வங்கி அதிகாரி வீட்டை உள்குத்தகைக்கு விட்டு மோசடி


வங்கி அதிகாரி வீட்டை உள்குத்தகைக்கு விட்டு மோசடி
x
தினத்தந்தி 24 March 2022 11:30 PM IST (Updated: 24 March 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டை உள்குத்தகைக்கு விட்டு மோசடி செய்த பா.ஜ.க. இளைஞரணி நிர்வாகி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரியில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டை உள்குத்தகைக்கு விட்டு மோசடி செய்த பா.ஜ.க. இளைஞரணி நிர்வாகி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி
புதுச்சேரி சாரம் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 65). வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பாக்குமுடையான்பேட்டை அன்னை நகரில் உள்ள தனது வீட்டின் முதல்மாடியை புதுச்சேரி வெங்கட்டாநகரை சேர்ந்த பா.ஜ.க. இளைஞரணி நிர்வாகி பிறைசூடன், செல்லபெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் ஆகியோருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
அவர்களுடன் புவனா (36) என்பவரும் சேர்ந்து அங்கு தனியார் நிறுவனம் நடத்துவதாக கூறினர். நாளைடையவில் அந்த வீட்டில் கீழ் தளத்தையும் வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் அந்த வீட்டை சுந்தர் என்பவரிடம் உள்குத்தகைக்கு விட்டதாக தெரிகிறது. 
இதற்கிடையே கடந்த 9.12.2018 அன்று ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் பிறைசூடனிடம் வீட்டை காலி செய்யும்படி சுகுமாறன் கூறினார். ஆனால் அவர் வீட்டை காலி செய்ய மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டுள்ளார். அதற்கு சுகுமாறன் சம்மதம் தெரிவித்தார். பின்னர் 6 மாதத்திற்கு பிறைசூடன் வாடகை கொடுத்துள்ளார். அதன் பின் வாடகை கொடுக்கவில்லை.
வழக்குப்பதிவு
இதனை தொடர்ந்து பிறைசூடனை சுகுமாறன் தொடர்பு கொண்டு வீட்டை காலி செய்யுமாறு கூறினார். அவரும் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டை காலி செய்வதாக கூறினார். ஆனால் இதுவரை காலி செய்யவில்லை.
இந்த நிலையில் சுகுமாறன் தனது வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது சுந்தர் என்பவர் அங்கு குடியிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதில், பிறைசூடன், சுந்தர் ஆகிய 2 பேரும் போலியாக உடன்படிக்கை தயாரித்து எனது வீட்டை அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களுக்கு மோகன், புவனா ஆகியோர் உதவியாக இருந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்ய நடவடிக்கை
விசாரணையில் பிறைசூடன், மோகன்ராஜ் ஆகிய 2 பேரும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணியின் வீட்டை இதேபோல் வாடகைக்கு எடுத்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவே கோரிமேடு போலீசார் நீதிமன்ற அனுமதி பெற்று சிறையில் உள்ள அவர்கள் 2 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story