துபாய் சர்வதேச கண்காட்சி- தமிழ்நாடு அரங்கினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகக் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை இன்று திறந்து வைக்கிறார்.
துபாய்,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார். உலக கண்காட்சிகள், மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாகும். 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த நிகழ்வானது, 6 மாத காலங்களுக்கு நடைபெறும்.
துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி. இந்த உலகக் கண்காட்சி, துபாய் நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடந்து வருகிறது.
இந்த உலக கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில் இன்று முதல் 31-ந்தேதி வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது.
இந்தநிலையில், 4 நாள் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனி விமானம் மூலம் நேற்று சென்று அடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகக் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை இன்று திறந்து வைக்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த குழுவில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள்.
Related Tags :
Next Story