இணை கமிஷனர் ரம்யா பாரதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து


இணை கமிஷனர் ரம்யா பாரதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 25 March 2022 2:21 PM IST (Updated: 25 March 2022 2:21 PM IST)
t-max-icont-min-icon

சென்னை காவல்துறையின் வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை வடக்கு மண்ட இணை கமிஷ்னராக ரம்யா பாரதி  இருந்து வருகிறார். இவர் 2008ஆம் ஆண்டு தமிழ்நாட்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார். இவரை கடந்த ஜனவரி மாதம் சென்னை வடக்கு மண்ட இணை கமிஷனராக தமிழக  அரசு நியமனம் செய்தது.  அப்போது முதல் தன்னுடைய பணிகளை இவர் சிறப்பாக செய்து வருவதாக பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இரவு நேரங்களில் சைக்கிளில் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்.

இந்தநிலையில்,  கமிஷ்னர் ரம்யா பாரதி நேற்று நள்ளிரவில் திடீரென சைக்கிளில் சென்று காவலர்களை கண்காணித்துள்ளார். அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கி காலை 4 மணி வரை சைக்கிளில் பயணம் செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளை ஆய்வு செய்துள்ளார். மேலும் அப்போது இரவு பணியில் இருந்த காவலர்களிடம் அங்கு இருக்கும் நிலை குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

சென்னை பாரிமுனை பூக்கடையில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை 8 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட சரகங்களில் சைக்கிளில் சென்று   ரம்யா பாரதி ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக இரவில் ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் முறையாக பணி செய்கிறார்களா என ஆய்வு செய்தார்.

அப்போது, இரவு முழுவதும் விழித்திருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வு குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. சமூகதளவாசிகள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில்,  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில்,

ரம்யா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி. அவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன். தமிழ்நாடு காவல்துறை சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும் என பதிவிட்டுள்ளார்.

Next Story