29 ந்தேதி முழு அடைப்பு போராட்டம் தி மு க காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆதரவு


29 ந்தேதி முழு அடைப்பு போராட்டம்   தி மு க  காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆதரவு
x
தினத்தந்தி 25 March 2022 10:43 PM IST (Updated: 25 March 2022 10:43 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் 29-ந்தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

புதுச்சேரி
புதுவையில் 29-ந்தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

வேலைநிறுத்தம்

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் 28, 29-ந்தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
புதுவையிலும் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும் புதுவையில் 29-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தவும், அன்றைய தினம் 11 இடங்களில் மறியல் போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு கேட்டு தொழிற்சங்கத்தினர் நாள்தோறும் பிரசார இயக்கங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்சிகள் ஆலோசனை

இந்தநிலையில் முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், வைத்தியநாதன், தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் அபிசேகம், சேதுசெல்வம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், விடுதலை சிறுத்தை கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், ம.தி.மு.க. பொறுப்பாளர் கபிரியேல், மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

முழு அடைப்புக்கு ஆதரவு

பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார்  மயமாக்குவது, கல்வி, மருத்துவம் ஆகிய மக்களின் அத்தியாவசிய பயன்பாட்டு துறைகளை முற்றிலும் வணிக நோக்கம் கொண்டதாக மாற்றிவிட்டது.
பெட்ரோலிய பொருட்கள் மீதான தொடர் விலை உயர்வு, அனைத்து பொருட்களின் விலைகளையும் உயர்த்தி வருகின்றன. தற்போது கியாஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. 
இதை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற 28, 29-ந்தேதிகளில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்துக்கும், 29-ந்தேதி புதுவை மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கும், மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி முழு ஆதரவு அளிக்கிறது.
இப்போராட்டத்தில் முழுமையாக பங்கேற்க வணிகர்கள், கடை வியாபாரிகள், திரையரங்கு உரிமையாளர்கள், லாரி மற்றும் பஸ் உரிமையாளர்கள் மீன்பிடி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் மதச்சார்பற்ற கூட்டணி கேட்டுக்கொள்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story