ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மதுக்கடைகளை ஏன் மூடக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி


ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மதுக்கடைகளை ஏன் மூடக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 26 March 2022 2:11 AM IST (Updated: 26 March 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா மலைப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு ஏன் உத்தரவிடக்கூடாது? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

குன்னூர் வனப்பகுதியில் 100 மீட்டர் அளவிற்கு யானை வழித்தடம் அடைக்கப்பட்டு சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், அவ்வழியே சென்ற யானைகள் கீழே சறுக்கி விழுவது போன்ற காணொலி வெளியானது.

இதையடுத்து வனவிலங்குகளை பாதுகாக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர் சுப்ரியா சாகு சார்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

குழு அமைப்பு

அதில், “ஐகோர்ட்டு உத்தரவுபடி இயற்கைக்கு மாறாக மற்றும் ரெயில்களில் மோதி யானைகள் இறப்பு ஆகியவற்றை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியிருந்தார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், வனத்துறை, ரெயில்வே துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை மாவட்ட கலெக்டர் அமைத்துள்ளார். இந்த குழு கடந்த 22-ந்தேதி சம்பந்தப்பட்ட பகுதியில் கூட்டு ஆய்வை நடத்தியது. யானைகள் வழித்தட பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படும்” என்றார்.

மதுக்கடை மூடல்?

அப்போது, வனப்பகுதியில் நெகிழிப் பொருள்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பான வார நாளிதழின் இணையத்தில் வெளியான காணொலிக் காட்சி நீதிபதிகள் முன்பு காண்பிக்கப்பட்டது. இதை பார்த்த நீதிபதிகள், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா மலைப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை ஏன் மூடுவதற்கு உத்தரவிடக்கூடாது? என கேள்வி எழுப்பினார்.

இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கடும் உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.

நீதிபதிகள் ஆய்வு

பின்னர், “வனம், மலைப்பகுதிகளில் மதுபாட்டில்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த, அப்பகுதியில் மாற்று வழியில் மது விற்பனை செய்ய ஏதேனும் திட்டம் உள்ளதா? வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து வருகிற ஏப்ரல் மாதம் 9 மற்றும் 10-ந்தேதிகளில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், சிறப்பு அரசு பிளீடர் செல்வேந்திரன் உள்ளிடோருடன் நாங்களும் (நீதிபதிகளும்) நேரில் ஆய்வு செய்ய உள்ளோம். அன்றைய தினம் மதுபாட்டில்கள் விற்பனை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அபராதம்

நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் உத்தரவை அமல்படுத்தக்கோரிய வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மாவட்ட கலெக்டர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

‘சீல்’ வைக்க வேண்டும்

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், வெறும் அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது. இந்த விஷயத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

பின்னர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Next Story