தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 491 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் அமைச்சர் தகவல்


தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 491 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 26 March 2022 2:15 AM IST (Updated: 26 March 2022 2:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கடந்த 10 மாதத்தில் தடை செய்யப்பட்ட 491 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை தியாகராயர் நகரில் மாநில அளவிலான உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கான பயிலரங்கத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சிறப்பு அலுவலர் செந்தில் குமார், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், உணவு பாதுகாப்புத்துறை இயக்குனர் மற்றும் கூடுதல் கமிஷனர் டாக்டர் சேரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், மதுரை, சேலம், கோவை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய 6 இடங்களில் உள்ள உணவு ஆய்வகங்களில் உணவு மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது.

உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கான பயிலரங்கம் இன்று (நேற்று) தொடங்கப்பட்டு 32 மாவட்ட நியமன அலுவலர்கள், 64 உணவு பாதுகாப்பு அலுவலர்கள், 3 உணவு பகுப்பாய்வாளர்கள் ஆகியோருக்கு வல்லுனர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

புகையிலை பறிமுதல்

இந்த துறையில் உரிமம் மற்றும் பதிவுச்சான்று மூலமாக பெறப்பட்ட வருவாய் ரூ.38.2 கோடி. அந்த வகையில் கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிக அளவு வருவாய் பெற உழைத்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த அரசு புகையிலை மற்றும் நிக்கோட்டின் கலந்த உணவு பொருட்களை தடை செய்வதை முக்கிய பணியாக கருதுகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 91 டன் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல 400 டன் புகையிலை பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தயாரித்த, விற்பனை செய்த தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் வரை, 9 அவசர தடையாணை உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.

பணி ஆணை

சரிவிகித உணவை உறுதி செய்ய சர்க்கரை, உப்பு, கொழுப்பு அதிகமாக எடுத்துக்கொள்வதை படிப்படியாக குறைக்க ‘சற்றே குறைப்போம்’ என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

நட்சத்திர விடுதிகளிலும், விழாக்காலங்களிலும் பயன்படுத்தக்கூடிய அதிகப்படியான உணவு வீணாவதைத் தடுக்க, உபரி உணவை வீணாக்காமல் பயன்படுத்துவோம் என்ற திட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அதேபோல், உபயோகித்த எண்ணெய் மறுபயன்பாட்டிற்கு திட்டமும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட உபயோகித்த எண்ணெய் அளவு 1,214 கி.லி ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருநங்கைக்கு பணி ஆணை

இதைத்தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில அளவில் நர்சாக பயின்று பட்டம் பெற்று, நர்சு கலந்தாய்வில் பதிவு செய்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முதல் திருநங்கை தமிழ் செல்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேசிய நலவாழ்வு குழுமத்தில் திட்ட உதவியாளருக்கான பணி ஆணையை வழங்கினார்.

Next Story