கரூர், தென்காசி மாவட்டங்களில் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு


கரூர், தென்காசி மாவட்டங்களில் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 26 March 2022 10:48 AM IST (Updated: 26 March 2022 10:48 AM IST)
t-max-icont-min-icon

கரூர், தென்காசி மாவட்டங்களில் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தலின்போது பல்வேறு காரணங்களுக்காக 62 இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

அவ்வாறு விடுபட்டுள்ள 62 இடங்களில் நகராட்சித் தலைவர், துணைத்தலைவர்,பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.  முன்னதாக காலை 9.30 முதல் மதியம் 2 மணி வரை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில்  கரூர், தென்காசி மாவட்டங்களில் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி கரூர், புலியூர் பேரூராட்சியில் போதுமான உறுப்பினர்கள் வராததால் மறைமுகத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார். 

இதேபோல தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலை, திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்ததால்  இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தலில் அதிமுக, திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. 

போலீஸ் வாகனம் மீது கல்வீசி தாக்கியதால் பதற்றமான சூழல் உருவானது. இதனைத்தொடர்ந்து தடியடி நடத்தி கூட்டத்தை போலீசார் கலைத்தனர். 

வெள்ளலூரில் மொத்தமுள்ள 15 வார்டில் திமுக - 6, அதிமுக - 8, சுயேட்சை - 1 வார்டுகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story