சென்னையில் சினிமாவை மிஞ்சிய ஆட்கடத்தல் சம்பவம் - 6 பேர் கைது
விருகம்பாக்கத்தில் ரூ. 8 லட்சம் பண தகராறில் நில தரகரை கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50) நில தரகர். இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் விருகம்பாக்கம் ஏ.வி.எம் காலனி பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென ரவியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கம் உள்ளவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் தலைமையில் விரைந்து வந்த தனிப்படை போலீசார் புழல் அருகே உள்ள கள்ளிக்குப்பம் பைபாஸ் சாலையில் வைத்து கடத்தல் கும்பலை மடக்கி பிடித்து ரவியை பத்திரமாக மீட்டனர். அப்போது 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
பணத்தகராறு காரணமாக ரவியை அயனாவரம் பகுதியை சேர்ந்த நசுரூதீன், சுனில்குமார், கோபிநாத், தாம்சன் ஆரோக்யராஜ், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த அஜய்குமார், கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த திலிப் உள்ளிட்ட 8 பேர் கும்பல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஆள் கடத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நில மோசடி அம்பலம்
ரவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அயனாவரம் பகுதியில் உள்ள பிரச்சினைக்குரிய வீட்டை ரூ 8 லட்சம் பெற்றுக் கொண்டு நசுரூதீனுக்கு உள் வாடகைக்கு விட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த விபரம் தெரிந்து அந்த வீட்டை காலி செய்த நசுரூதீன் தனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டு வந்தார்.
ஆனால் பணத்தை திருப்பி தராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்ததால் நசுரூதீன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரவியை கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் நசுரூதீன் கொடுத்துள்ள பண மோசடி புகாரின் பேரில் அயனாவரம் போலீசார் நில தரகர் ரவியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story