டான்செட் 2022 தேர்வு: மார்ச் 30 முதல் ஏப்ரல் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக்கழகம்
டான்செட் 2022 தேர்வுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வரும் 2022-23ஆம் கல்வியாண்டில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ( MBA, MCA, M.E., M.Tech., M.Plan., M.Arch) ஆகிய பட்டப் படிப்பிற்கான (TANCET ) நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு மார்ச்30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 18ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.
https://tancet.annauniv.edu/tancet/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், மேலும் விபரங்களை இந்த இணையதளத்தில் சென்று தெரிந்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும்போது மாணவர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல், செல்போன் எண்ணை பயன்படுத்த வேண்டும். தேர்வுக்கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். இவர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு மே 2ஆம் தேதி வெளியிடப்படும்.
எம்.சி.ஏ. படிப்பிற்கு மே 14ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்.பி.ஏ.படிப்பிற்கு மே 14ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு மே 15ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை நுழைவுத் தேர்வு நடைபெறும்.
தகுதி: டான்செட் தேர்வு எழுத விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொலைத்தூரக் கல்வி திட்டத்தின் மூலம் பிஇ, பி.டெக் முடித்தவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story