25 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு..!


25 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு..!
x
தினத்தந்தி 27 March 2022 3:42 PM IST (Updated: 27 March 2022 3:42 PM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழக்கு விழா 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை,

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுருக்கு விழா 25 ஆண்டுகளுக்குப்பிறகு இன்று நடைபெற்ற நிலையில் இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

அமிர்தகடேஸ்வரர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ளது அபிராமி அம்பாள் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான இந்த கோவில் தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட 27 கோவில்களுள் சிறப்பு மிக்க கோவில் இது ஆகும். இந்த கோவில் அட்டவீரட்ட தலங்களில் ஒன்று. இந்த கோவில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.

மேலும் அபிராமிபட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக்கி அபிராமி அம்மன் திருவிளையாடல் புரிந்த சிறப்பு பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவார பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. 

இந்த கோவிலில் மணிவிழா, பீமரதசாந்தி, பவளவிழா, சதாபிஷேக விழா போன்ற விழாக்கள் விஷேசமாக கொண்டாடப்படும் திருத்தலமாகவும் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 1997-ம்ஆண்டு மார்ச் மாதம் 26-ந்தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு.....

இதையடுத்து திருப்பணிகள் கடந்த 1 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 18-ந்தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து கடந்த 23-ந்தேதி மாலை 4 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பின்னர் தொடர்ந்து சுவாமிக்கு 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

குடமுழுக்கு விழா

இன்று காலை 5 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு கடங்கள் புறப்பாடும், பின்னர் குடமுழுக்கும் நடைபெற்றது. கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களை சென்றடைந்தது. 

குருக்கள் பலர் மூலம் யாகசாலை கடங்கள் எடுத்துவரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு 10.10 மணிக்கு விமான, ராஜகோபுரம் மற்றும் கோபுரங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 11 மணிக்கு மூலஸ்தான குடமுழுக்கும், தீபாராதனையும் நடைபெற்றது. குடமுழுக்கு விழா தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

ஆதீனங்கள் பங்கேற்பு

குடமுழக்கு விழாவில் திருவாவடுதுறை ஆதினம், திருவண்ணாமலை ஆதினம், தொண்டை மண்டலம் ஆதினம், வேளாக்குறிச்சி ஆதினம், சூரியனார்கோவில் ஆதினம், செங்கோல் ஆதினம், துழாவூர் ஆதினம், பொம்மபுரம் ஆதினம் உள்ளிட்ட ஆதினங்கள்,  மடாதிபதிகள், ஐகோர்ட்டு நீதிபதிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, போலீஸ் சூப்பிரண்டு சுகுனா சிங், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அறநிலையத்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர் மங்கையர்கரசி மற்றும் புதுச்சேரி அமைச்சர் சந்திரபிரியங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை காண்பதற்காக அதிகாலை 4 மணி முதல் கோவில் வளாகத்தில் பக்தர்கள் குவிய தொடங்கினர். திருக்கடையூரில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. மாலை 6 மணிக்கு மகாஅபிசேகமும் அதைத்தொடர்ந்து 7.30 மணிக்கு கல்யாண வைபவமும், பாலம்பிகை உடனாகிய காலசம்காரமூர்த்தி, பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா காட்சியும் நடைபெற்றது.

கும்பிசேஷத்தையொட்டி திருக்கடையூர் பகுதியில் ஆங்காங்கே பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர், குளிர்பானங்கள் போன்றை வழங்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

Next Story