சூளகிரி மேம்பாலத்தில் கார் மீது சுற்றுலா பஸ் மோதியதில் இளம்பெண் பலி


சூளகிரி மேம்பாலத்தில் கார் மீது சுற்றுலா பஸ் மோதியதில் இளம்பெண் பலி
x
தினத்தந்தி 27 March 2022 4:08 PM IST (Updated: 28 March 2022 11:56 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ் சாலையில் உள்ள சூளகிரி மேம்பாலத்தில் கார் மீது சுற்றுலா பஸ் மோதியதில் இளம்பெண் பலியானார். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டிவிஎஸ் நகரை சேர்ந்தவர் ராஜூ. இவர் தனது குடும்பத்துடன் காரில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றார். காரில் 8 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது.

அப்போது சூளகிரியில் ராயகோட்டை மேம்பாலம் மீது சென்ற போது, ஓசூரில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா பஸ் ஒன்று கார் மீது வேகமாக மோதியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி நின்றது. இதில் காரின் பெரும்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராஜுவின் மனைவி சாரதா (28) சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த மற்ற 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சூளகிரி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று காரில் இருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த சாரதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story